Jul 15, 2026 - 12:14 PM -
0
இளம் தொழில்நுட்பத் திறமையாளர்களுக்கான விறுவிறுப்பான தளங்களாகவும், தொழில்நுட்ப முயற்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட SLIoT Challenge மற்றும் IESL RoboGames ஆகியவற்றின் இறுதிப் போட்டிகள் அண்மையில் பெரும் வரவேற்புடனும் உற்சாகத்துடனும் நிறைவடைந்தன. அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கும், இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் எதிர்காலத்திற்குத் தயாரான திறமையாளர்களை வளர்த்தெடுப்பதற்கும் தனக்கிருக்கும் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இலங்கை பொறியியலாளர் நிறுவனம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து இப்போட்டிகளுக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சியை SLT- MOBITEL மேற்கொண்டிருந்தது. இளைஞர்கள் தங்களது தொழில்நுட்பத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான விரிவான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், இந்நிகழ்வுகள் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றன.
இலங்கையின் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு ஆற்றல்மிக்க தளத்தை வழங்குவதற்காக SLT-MOBITEL நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த இறுதிப் போட்டிகள், புத்தாக்கங்களின் பரந்தளவிலான செய்முறை விளக்கங்களைக் கொண்டதாக அமைந்திருந்தன. இதில் பங்கேற்பாளர்கள் தங்களின் தளராத, முன்னோடித் திறனை வெளிப்படுத்தும் வகையில் விறுவிறுப்பான மற்றும் ஆரோக்கியமான போட்டிகளில் களம் கண்டனர். இளைஞர்கள் தங்களது படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவதில் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இவ்விரு இறுதிப் போட்டிகளும் அமைந்திருந்தன.
SLT-MOBITEL நிறுவனத்தின் ஆதரவுடன் பிரம்மாண்டமாக அமைந்த SLIoT Challenge 2026 போட்டி, பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் திறந்த பிரிவைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு Internet of Things - IoT தொழில்நுட்பத்தில் புரட்சிகரமானதாக அமையக்கூடிய திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியிருந்தது. இறுதிப் போட்டிக்குத் தெரிவானவர்கள் தங்களது தொழில்நுட்பத் தீர்வுகளை GTN Lab, ICE Room, InsightHub, SLIoT Lab மற்றும் Sysco LABS உள்ளிட்ட கண்காட்சித் தளங்களில் செய்முறை விளக்கங்களாகக் காண்பிக்கக் கூடியதாக இருந்தது. நடைமுறைச் சாத்தியக்கூறுகளைக் கொண்ட புதிய மற்றும் புத்தாக்கமான IoT தீர்வுகளை இப்போட்டி அடையாளப்படுத்தியது மட்டுமன்றி, இலங்கையின் தொழில்நுட்பப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதற்கான SLT-MOBITEL இன் விரிவான நோக்கையும் இது பிரதிபலித்தது. நடுவர்கள் வெற்றியாளர்களை அறிவிப்பதற்கு முன்னர் இரண்டு சுற்றுகளில் திட்டங்களை மதிப்பீடு செய்தனர்.
SLIoT Challenge 2026 போட்டியின் பாடசாலைப் பிரிவில், கொழும்பு 7 றோயல் கல்லூரியைச் சேர்ந்த Team Quarista தங்களது ஸ்மார்ட் கழிவு முகாமைத்துவ திட்டம் (Smart Waste Management System) மூலம் வெற்றியாளராகத் தெரிவாகியது. பல்கலைக்கழக மாணவர் பிரிவில், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Team Eluvis தங்களது ஸ்மார்ட் இறால் பண்ணை கண்காணிப்புத் திட்டம் (Smart Shrimp Farm Monitoring System) மூலம் வெற்றியீட்டியது.
அத்துடன், திறந்த பிரிவில் தங்களின் தனித்துவத்தையும் தொழில்நுட்ப ஆளுமையையும் வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட RoboticGen Labs, ஊழியர்களுக்கான போக்குவரத்து முகாமைத்துவத் திட்டம் (Employee Transport Management System) ஒன்றினை வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, RoboGames 2026 இன் இறுதிப் போட்டியும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் திறந்த பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலான போட்டிகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இந்த இறுதிப் போட்டியின் சிறப்பம்சமாக விளங்கிய விறுவிறுப்பான BattleBots Challenge, ரொபோட்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் பெருமளவானோரை மொரட்டுவப் பல்கலைக்கழகத்தை நோக்கி ஈர்த்திருந்தது. பிரதான நிகழ்வுக்கு மேலதிகமாக, ஆர்வமுள்ள ஏனைய தரப்பினரும் பங்கேற்கும் வகையில் திறந்த BattleBot Challenge போட்டியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
RoboGames 2026 போட்டியின் பாடசாலைப் பிரிவில், எலிசபெத் மொய்ர் பாடசாலை அதன் Controlled Chaos குழுவும் வெற்றியாளராகத் தெரிவாகின. பல்கலைக்கழக மாணவர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை ருஹுணுப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த FalconX குழுவினர் தமதாக்கிக் கொண்டனர். அத்துடன், விறுவிறுப்பாக நடைபெற்ற திறந்த பிரிவின் வெற்றியாளராக Team Ascension தெரிவுசெய்யப்பட்டது.
இவ்விரு நிகழ்வுகளுக்குமான இணைய மற்றும் வலையமைப்பு இணைப்புத்திறனை, SLT- MOBITEL வெற்றிகரமாக வழங்கியிருந்ததுடன், வார இறுதி முழுவதும் போட்டி நடைபெற்ற இடங்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தடையற்ற, அதிவேக செயல்திறன் மிக்க அனுபவங்களை உறுதி செய்தது. இதன் மூலம், நாட்டின் அதிவேகமான மற்றும் மீளெழுச்சித் திறன் மிக்க வலையமைப்புத் சேவை வழங்குநர் என்ற தனது நிலையை அந்நிறுவனம் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.
SLIoT Challenge மற்றும் RoboGames ஆகிய போட்டிகளுக்கு முன்னின்று ஆதரவளிப்பதன் ஊடாக, SLT-MOBITEL நிறுவனம் இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் புத்தாக்கங்களையும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) அறிவையும் தொடர்ந்தும் வளர்த்தெடுத்து வருகின்றது. இத்தளங்கள் பங்கேற்பாளர்கள் தங்களது எண்ணக் கருத்துக்களை (ideas) தாக்கமுள்ள திட்டங்களாக மாற்றுவதற்கும், இலங்கையின் டிஜிட்டல் பயணத்தை வடிவமைக்கக்கூடிய புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கின. இலங்கையின் இளைய தலைமுறையினரின் திறன்களை வெளிக்கொணரும் தளங்களாக விளங்கும் இவை, நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக SLT-MOBITEL முன்னெடுத்து வரும் விரிவான முயற்சிகளை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றன.
