Jul 18, 2026 - 03:19 PM -
0
கிரிக்கெட் விளையாட்டின் என்றும் அழியாத நட்சத்திரமாக விளங்கிய சர் கார்பீல்ட் சோபர்ஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (18) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் எல்.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மேலும், அவருக்கு கௌரவம் அளிக்கும் விதமாக இன்றைய போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களும் கருப்பு நிற கைப்பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.
சர் கார்பீல்ட் சோபர்ஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சர் கேரி சோபர்ஸ் இலங்கை கிரிக்கெட்டுடன் மிகவும் சிறப்பான மற்றும் நீண்டகால தொடர்பைக் கொண்டிருந்த ஒரு மாபெரும் ஆளுமையாவார்.
குறிப்பாக, 1980களின் முற்பகுதியில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய அவர், 1983 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் இலங்கை அணிக்கு வழிகாட்டியாக இருந்தார் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோபர்ஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், உலக கிரிக்கெட் விளையாட்டுக்காக அவர் விட்டுச் சென்றுள்ள அசாத்தியமான மரபு, பல தலைமுறை வீரர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
