Jul 19, 2026 - 11:10 AM -
0
ஹொரணை - மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில், அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் ஹொரணை - மொரகஹஹேன வீதியின் கனன்வில விகாரைக்கு அருகில் உள்ள வளைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பன்னிபிட்டிய மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷ சித்மின ஆகிய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றை ரசித்துவிட்டு, மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஹொரணை பகுதியில் இருந்து அதிவேகமாக பயணித்த இந்த இளைஞர்கள், கனன்வில வளைவில் திரும்ப முற்பட்ட போது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் வலதுபுறமாக இழுத்துச் செல்லப்பட்டு, எதிரே வந்த மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் பின்னர் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
