Jul 19, 2026 - 04:34 PM -
0
79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயற்சித்த போதே இரண்டு வெளிநாட்டு விமானப் பயணிகள் இவ்வாறு இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 வயதுடைய இந்த சந்தேக நபர்கள் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்களை வசிப்பிடமாகக் கொண்ட, அந்நாட்டு உணவகமொன்றில் பணிபுரிபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் இந்த சிகரெட் தொகையை கம்போடியாவில் கொள்வனவு செய்து மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்திற்கு வந்து, அங்கிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட 53,200 சிகரெட்டுகளைக் கொண்ட 266 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் நாட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
