Jul 20, 2026 - 05:48 PM -
0
லங்கா பிறீமியர் லீக் தொடரின் தேசிய தளத்தைப் பயன்படுத்தி, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இம்முறை லங்கா பிறீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் உரிமையாளர் பிரியங்க டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், பிங்க் மெட்ச் விழிப்புணர்வுப் போட்டி நடத்தப்பட்டது. மார்பகப் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்ற செய்தியை இப்போட்டி வலியுறுத்தியது.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் 19ஆம் திகதி நடைபெற்றதுடன், இதில் தம்புள்ள சிக்ஸர்ஸ் மற்றும் ஜெப்னா கிங்ஸ் அணிகள் மோதின. விளையாட்டுப் போட்டிகளுக்கு அப்பாற்பட்ட உன்னத நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ஜெப்னா கிங்ஸ் அணியினரும் இந்த பிங்க் மெட்ச் நிகழ்வில் பங்கேற்றனர். புற்றுநோய் விழிப்புணர்வைப் பொறுத்தவரை இரு அணிகளும் எதிரெதிர் அணிகள் அல்ல, ஒரே அணியாகவே செயல்படுகின்றன என்பதை இந்த ஒற்றுமை நிரூபித்தது.
இப்போட்டியின் போது, தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி வீரர்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற ஆடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிந்து விளையாடினர். அத்துடன், மைதானம், மாபெரும் திரைகள் மற்றும் நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகியவற்றின் வாயிலாக 'தொடுதல், பார்த்தல், பரிசோதித்தல்' (Touch. Look. Check. - TLC) என்ற முக்கிய விழிப்புணர்வுச் செய்தி மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. பெண்கள் தங்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் இப்போட்டியின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த விழிப்புணர்வுச் செய்திகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், அபேக்ஷா மருத்துவமனை, இலங்கை புற்றுநோயியல் நிபுணர்களின் கல்லூரி மற்றும் பிற தேசிய தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற விசேட நிகழ்வில், சுவ அரண இல்லம் மற்றும் SOS சிறுவர் கிராமம் (SOS Childrens Villages Sri Lanka) ஆகியவற்றினைச் சேர்ந்த குழந்தைகள் வீரர்களுடன் இணைந்து பங்கேற்றனர். இது புற்றுநோயானது ஒட்டுமொத்த குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மேலும், போட்டியை நேரில் காண வந்த ரசிகர்களுக்கு உத்தியோகபூர்வ 'பிங்க் ஃபேன் டி-ஷேர்ட்களை' வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பணிகள், கீமோதெரபி நோயாளிகளுக்கான செயற்கை முடி அமைப்புகள் (Wigs), மார்பக செயற்கை உறுப்புகள் மற்றும் இதர நோயாளிகளுக்கான ஆதரவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் குறித்து ஐ.பி.ஜி. நிறுவனத்தின் ஸ்தாபகரும், தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், “கிரிக்கெட் விளையாட்டுக்கு அப்பாற்பட்டு எவ்வாறு ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எல்.பி.எல். பிங்க் மேட்ச் நிரூபித்துள்ளது. தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதில் பெருமையடைகிறோம். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதை ஊக்குவிப்பதுடன், தொடுதல், பார்த்தல், பரிசோதித்தல் ஆகிய மூன்று எளிய வார்த்தைகள் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதை ஒவ்வொரு இலங்கை குடிமகனுக்கும் நினைவூட்டுகிறது.” என்றார்.
இந்த நிலையில், லங்கா பிறீமியர் லீக்கின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல கருத்துத் தெரிவிக்கையில், “ஒரு உன்னதமான தேசிய நோக்கத்திற்காக கிரிக்கெட்டை எவ்வாறு ஒரு தளமாகப் பயன்படுத்தலாம் என்பதை தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி முன்மாதிரியாக நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்த முக்கிய செய்தியை இன்னும் பலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கவும், இலங்கை முழுவதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எல்.பி.எல். ஒரு பாலமாக இருந்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.” என்று குறிப்பிட்டார்.
