Jul 21, 2026 - 10:46 AM -
0
Ceyline குழுமத்தின் துணை நிறுவனமான Ceyconnect (Pvt) Ltd, இலங்கையின் முதலாவது நீண்ட தூர மின்சார முதன்மை இயக்கியை (EV Prime Mover) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் தற்போது Lion Brewery (Ceylon) PLC நிறுவனத்தின் வெளிச்செல்லும் விநியோகச் சங்கிலி (Outbound Supply Chain) செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வாகன அறிமுகமானது Lion மற்றும் Ceyline குழுமம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்ச்சியான கூட்டுறவின் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகும்.
இதற்கு முன்னர், Lion Brewery நிறுவனத்தின் செயற்பாடுகளுக்காக வலுசக்தி வினைத்திறன் கொண்ட களஞ்சியசாலைகளை Ceyline குழுமம் நிர்மாணித்திருந்தது. தற்போது அந்தப் பங்களிப்பானது சேமிப்பு மற்றும் களஞ்சியசாலைத் துறையிலிருந்து போக்குவரத்துத் துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
“நீண்ட தூர மின்சார வாகனப் (EV) போக்குவரத்துச் சேவையின் உண்மையான ஆற்றலை மதிப்பிடுவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமது இலக்கானது இரு பகுதிகளைக் கொண்டது: முதலாவதாக, வழங்கல்(logistics) மற்றும் கடல்சார் தொழில்துறைகளில் நிலைபெறுதகு தன்மையை (Sustainability) விரைவுபடுத்துவது; இரண்டாவதாக, எமது பங்காளர்களுக்கு இத்திட்டத்தின் வணிக மற்றும் பொருளாதார ரீதியிலான சாத்தியக்கூறுகளை நிரூபிப்பது,” என Ceyline குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரதேஷ் தலுவத்தே தெரிவித்தார்.
இந்த வாகனத்தைச் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம், இலங்கையில் கனரக வணிகப் போக்குவரத்து மிகச் சிறந்த செயல்திறனுடன், அதேவேளை முற்றிலும் பூச்சிய உமிழ்வு (Zero Emission) முறையில் இயங்க முடியும் என்பதை நாங்கள் வெற்றிகரமாக நிரூபித்து வருகின்றோம் என Ceyconnect நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரபாத் கருணாரத்ன தெரிவித்தார். இந்த மின்சார முதன்மை இயக்கியின் இணைப்பானது எமது நிலைபெறுதகு பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு முக்கிய முதலீடாகும். தூய வலுசக்தி மாற்றத்தை நோக்கிய எமது மேலோங்கிய இலட்சியத்தின் ஒரு முக்கிய அம்சமாகவும் இது அமைகின்றது என Lion Brewery (Ceylon) PLC நிறுவனத்தின் வெளிச்செல்லும் வழங்கல் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவர் கவீன் காயத்ம தெரிவித்தார்.
Lion Brewery நிறுவனத்தின் விநியோக வலையமைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மின்சார வாகனக் கட்டமைப்பை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக Ceyconnect தெரிவித்துள்ளது.
Ceyconnect (Pvt) Ltd என்பது Ceyline குழுமத்தின் ஒரு துணை நிறுவனமாகும். இது சிறிய ரக விநியோக வாகனங்கள் முதல் கனரக முதன்மை இயக்கிகள் (Heavy-duty Prime Movers) வரை உள்ளடக்கிய ஒரு வாகனக் கட்டமைப்பை இயக்குவதுடன், முன்னணி வாடிக்கையாளர்களுக்கு பல்வகைப்பட்ட போக்குவரத்துத் தீர்வுகளையும் வழங்கி வருகின்றது.
Lion Brewery (Ceylon) PLC (Lion) இலங்கையின் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனமாகும். இது தனது புகழ்பெற்ற “Lion” வர்த்தக நாமத்தின் கீழும், மூலோபாயக் கூட்டாண்மைகள் மூலம் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமங்களின் கீழும் பல்வேறு வகையான மதுபானங்களை உற்பத்தி செய்தல், பொதியிடல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்குச் சேவையாற்றும் இந்நிறுவனம், இலங்கையின் மிகப்பெரிய மதுபான ஏற்றுமதியாளராகவும் திகழ்கின்றது.
