Jul 22, 2026 - 01:59 PM -
0
இலங்கையின் விவசாய இயந்திரத் துறையில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான லங்கா டிராக்டர்ஸ் லிமிடெட் (Lanka Tractors Limited), தனது பழமையான கொழும்பு-11 காட்சியகத்தை மீண்டும் உத்தியோகபூர்வமாகத் திறந்துள்ளதுடன், ACE டிராக்டர் வர்த்தக நாமத்தையும் நாட்டில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இல. 343, ஒல்கொட் மாவத்தை, கொழும்பு-11 இல் அமைந்துள்ள இந்தக் காட்சியகத்தை, பிரதம விருந்தினரான, அரலிய குழுமத்தின் தலைவர் திரு. டட்லி சிறிசேன அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் லங்கா டிராக்டர்ஸ் லிமிடெட்டின் தலைவர் உபுல் ஜயசூரிய, முகாமைத்துவப் பணிப்பாளர் திலின அபேசூரிய, வர்த்தகப் பிரிவுத் தலைவர் நிஷாந்த யாப்பா மற்றும் ஆசியா அசெட் ஃபைனான்ஸ் பி.எல்.சி (Asia Asset Finance PLC) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
1971 ஆம் ஆண்டு அரச வர்த்தக (டிராக்டர்) கூட்டுத்தாபனமாக ஆரம்பிக்கப்பட்ட லங்கா டிராக்டர்ஸ் நிறுவனம், 1991 ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு, இலங்கையில் விவசாய இயந்திரங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. பல தசாப்தங்களாக, Massey Ferguson, Kubota மற்றும் TAFE போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தரமான தயாரிப்புகள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பின்னரான சேவைகளின் மூலம் பல தலைமுறை இலங்கை விவசாயிகளின் நம்பிக்கையை இந்நிறுவனம் பெற்றுள்ளது. 1982 ஆம் ஆண்டு முதன்முதலில் அமைக்கப்பட்ட கொழும்பு-11 காட்சியகத்தின் மீள் திறப்பு நிகழ்வானது, ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை விவசாயத்தை இயந்திரமயமாக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஒரு நிறுவனத்தின் மறுமலர்ச்சியைப் பறைசாற்றுகிறது. இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Action Construction Equipment (ACE) Limited இன் விவசாயப் பிரிவான ACE Tractors உடனான பிரத்தியேகமான கூட்டாண்மையின் மூலம் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவனத்தின் மறுமலர்ச்சி ஆரம்பமானது. ACE நிறுவனம் டிராக்டர்கள், விவசாய இயந்திரங்கள், கட்டுமான உபகரணங்கள் மற்றும் கைத்தொழில் உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. இதன் வருடாந்த உற்பத்தித் திறன் 9,000 க்கும் மேற்பட்ட டிராக்டர்களைக் கொண்டுள்ளதுடன், 37க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இது ஏற்றுமதி செய்யப்படுவதுடன், உலகளாவிய ரீதியில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விநியோகஸ்தர் மற்றும் சேவை வலையமைப்பையும் கொண்டுள்ளது.
வர்த்தக ரீதியான அறிமுகத்திற்கு முன்னதாக, இலங்கையின் விவசாய நிலைமைகளுக்கு இந்தத் தயாரிப்புகள் மிகவும் பொருத்தமானவை என்பதை உறுதிப்படுத்த லங்கா டிராக்டர்ஸ் விரிவான மதிப்பீட்டுத் திட்டமொன்றை மேற்கொண்டது. ACE VEER 3000 (26 HP 4WD), ACE DI 350 NG (40 HP 2WD) மற்றும் ACE DI 450 NG (45 HP 4WD) ஆகிய மூன்று அறிமுக மாதிரிகள், ACE தொழில்நுட்ப நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் பல விவசாயப் பிரதேசங்களில் கடுமையான களப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. உள்ளூர் செயற்பாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப பல தயாரிப்பு மேம்படுத்தல்களைத் தொடர்ந்து, இந்த டிராக்டர்கள் 2026 ஏப்ரல் மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆரம்ப கட்டத் தொகுதிகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து வாடிக்கையாளர்கள் மிகவும் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவர் திரு. உபுல் ஜயசூரிய பின்வருமாறு தெரிவித்தார்:
இன்றைய நாள் லங்கா டிராக்டர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. எங்களது பழமையான கொழும்பு-11 காட்சியகத்தை மீண்டும் திறப்பதையிட்டும், ACE டிராக்டர்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதையிட்டும் நாங்கள் பெருமையடைகிறோம். சுமார் 100 பெர்ச் (perches) பரப்பளவைக் கொண்ட எமது புதுப்பிக்கப்பட்ட வசதி, 16,000 சதுர அடிக்கும் அதிகமான கட்டடப் பரப்பைக் கொண்டுள்ளதுடன், நவீன காட்சியகம், பொருத்துகை ஆலை (assembly plant), திருத்தகம் மற்றும் உண்மையான உதிரிப்பாகங்களுக்கான களஞ்சியசாலை ஆகியவற்றை உள்ளடக்கிய, விற்பனை மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்கான, முழுமையான ஒருங்கிணைந்த மையமாகத் திகழ்கிறது. லங்கா டிராக்டர்ஸ் பல தலைமுறைகளாக இலங்கை விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறது, மேலும் ACE நிறுவனம் எமது நாட்டின் விவசாயத்தின் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் மற்றொரு நம்பகமான வர்த்தக நாமமாக மாறும் என்று நான் நம்புகிறேன்.
நாடு முழுவதுமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், லங்கா டிராக்டர்ஸ் ஏற்கனவே செவனபிட்டிய, கெபிதிகொல்லாவ, தெஹியத்தகண்டிய மற்றும் கிரான் ஆகிய பகுதிகளில் விநியோகஸ்தர்களை நியமித்துள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் மேலும் பல நியமனங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. ACE பொறியியலாளர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்கும் குழுவொன்று, டிராக்டர் பொருத்துதல், வழக்கமான சேவை, தொழில்நுட்ப ஆதரவு, நடமாடும் களச் சேவை மற்றும் பழுதுபார்க்கும் உதவிகள் போன்றவற்றை நாடளாவிய ரீதியில் வழங்கும். உண்மையான ACE உதிரிப்பாகங்களின் விரிவான இருப்புகள் கொழும்பு களஞ்சியசாலையில் பேணப்படுவதுடன், விரைவான திருத்த வேலைகள், குறைந்தபட்ச தாமதம் மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் ஆதரவை உறுதி செய்யும் வகையில், அவை விநியோகஸ்தர் நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
தனது வாடிக்கையாளர் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விவசாயப் பருவங்களுக்கு ஏற்ற மீள்செலுத்தல் திட்டங்களுடன் நெகிழ்வான, விவசாயத்தை மையமாகக் கொண்ட குத்தகைத் (leasing) தீர்வுகளை வழங்குவதற்காக லங்கா டிராக்டர்ஸ் நிறுவனம் ஆசியா அசெட் ஃபைனான்ஸ் பி.எல்.சி (Asia Asset Finance PLC) உடன் கூட்டிணைந்துள்ளது. மேலும், இலங்கை முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு நவீன விவசாய இயந்திரமயமாக்கலை மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் மாற்றுவதற்காக ஏனைய முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடனும் இந்நிறுவனம் இணைந்து செயற்பட்டு வருகிறது.
