Jul 22, 2026 - 03:00 PM -
0
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் முன்னணி பல்துறை வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான அபெர்டீன் ஹோல்டிங்ஸ் (Aberdeen Holdings), தனது குழும நிறுவனங்கள் ஊடாக நிலைபேறினை மையமாகக் கொண்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுத்தது. இதன் மூலம், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு, சமூகப் பங்களிப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றில் கொண்டுள்ள தனது உறுதிப்பாட்டை, ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு (UN SDGs) அமைவாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
குழுமத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிகள், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிறுவன ஆளுகை (ESG) தொடர்பான அபெர்டீன் ஹோல்டிங்ஸின் விரிவான அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. நடைமுறைச் செயற்பாடுகள், ஊழியர்களின் பங்களிப்பு, சமூக ஈடுபாடு மற்றும் நீண்டகால நிலைபேறினை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்கள் ஆகியவற்றின் ஊடாக சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இம்முயற்சிகள் வெளிப்படுத்துகின்றன.
குழுமத்தின் இந்த முயற்சிகள், கடலோரப் பாதுகாப்பு, நிலையான விவசாயம், பொறுப்பான கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள் சுழற்சி குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல முக்கிய துறைகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தன.
ஒவ்வொரு முயற்சியும் தனித்தனி குழும நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், அபெர்டீன் செயற்பட்டு வரும் சமூகங்களிலும் தொழில்துறைகளிலும் அர்த்தமுள்ள சுற்றுச்சூழல் தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற பொதுவான நோக்கை அவை அனைத்தும் பகிர்ந்து கொண்டிருந்தன.
இந்தக் கூட்டுமுயற்சியின் ஒரு பகுதியாக, முன்னணி நெளிவுள்ள அட்டைப்பெட்டி (Corrugated Carton) உற்பத்தியாளரும், நிலையான பொதியிடல் தீர்வுகளை வழங்கும் நிறுவனமுமான Expack Corrugated Cartons PLC, சுமார் 1,350 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய கடலோர சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் தனது பணியாளர்களை ஈடுபடுத்தியது. இந்த முயற்சியின் மூலம் 656 கிலோகிராம் கழிவுகள் அகற்றப்பட்டதுடன், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் குழுப்பணி மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வு எவ்வளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் இது எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
நிலைபேறான விவசாயத்தை மேம்படுத்துவதற்கான குழுமத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ட்ரொபிக்கல் குளோபல் (Tropikal Global), கொஸ்கமவில் தனது செவ்விளநீர் நாற்று விநியோகத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதன் கீழ், உள்ளூர் விவசாயிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செவ்விளநீர் நாற்றுகள் வழங்கப்பட்டன. இதுவரை 500- க்கும் மேற்பட்ட நாற்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 1,000 நாற்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்தத் திட்டம், இலங்கையின் தனித்துவமான செவ்விளநீர் இனத்தின் நீண்டகால பயிரிடல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பதோடு, அதனைப் பராமரித்து வரும் சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்துகிறது.
பொறுப்பான கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி தொடர்பான அபர்டீனின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், நெப்டியூன் ரிசைக்கிளர்ஸ் (Neptune Recyclers) தனது EduCycle வேலைத்திட்டத்தின் ஊடாக பிளாஸ்டிக் மீள்சுழற்சி, பொறுப்பான கழிவு முகாமைத்துவம் மற்றும் சுழற்சிப் பொருளாதார சிந்தனை தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தியது.
மீரிகம தேசிய கல்வியியல் கல்லூரி மற்றும் கொழும்பிலுள்ள The British School ஆகிய கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற இந்த அமர்வுகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றதுடன், கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள் சுழற்சி தொடர்பாக மேலும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
குழுமத்தின் கடற்கரையோர பாதுகாப்பு முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ருஹுனு ஃபார்ம்ஸ், கரையோர பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஹம்பாந்தோட்டை நகரக் கடற்கரை மற்றும் அதனைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தது. இம்முயற்சி, இலங்கையின் இயற்கை கடற்கரையையும் கரையோரச் சூழலையும் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளித்ததுடன்,கடற்கரையோரச் சூழலமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்க உதவியது.
இந்த முயற்சிகள் ஊடாக, அபெர்டீன் ஹோல்டிங்ஸ், தனது அனைத்து நிறுவனங்களின் செயற்பாடுகளையும் ஒரே பொதுவான நோக்கத்தின் கீழ் ஒருங்கிணைத்து, நிலைபேறான வளர்ச்சியை நோக்கிய தனது பயணத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை ஊக்குவித்தல், சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் மூலம், தனது அனைத்து செயற்பாடுகளிலும் ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள்) விழுமியங்களை ஆழமாகப் பதியச் செய்து, மேலும் நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதில் குழுமம் உறுதியாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
