Jul 22, 2026 - 03:04 PM -
0
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (MI Finance) நிறுவனம் 1.1 பில்லியன் ரூபாயை புதிய மூலதனமாகத் திரட்டி, தனது உரிமைப் பங்கு வழங்கலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் மூலோபாயம், செயல்திறன் மற்றும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகள் மீதான பாரிய நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், இந்த உரிமைப் பங்கு வழங்கல் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகைக்கோரலை பதிவு செய்துள்ளது. ஆரம்ப பங்கு வழங்கலை விடவும் விண்ணப்பங்கள் அதிகரித்த நிலையில், பங்குதாரர்களின் இந்த பலத்த பங்களிப்பு, MI Finance இன் பயணப்பாதைக்கான உறுதியானதொரு சான்றளிப்பாக அமைந்திருப்பதுடன், நிறுவனம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கான அடித்தளத்தையும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மூலதன உள்வரவானது MI Finance இன் மூலதனத் தளத்தை வலுப்படுத்துவதுடன், நிதிசார் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, நிறுவனத்தின் ஒழுங்குமுறை மூலதன நிலைக்கு ஆதரவளிக்கிறது. அத்துடன், இது வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதற்கான MI Finance இன் திறனை விரிவுபடுத்தி, இலங்கையின் நிதிச் சேவைத் துறைக்குள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களை ஊக்குவிக்கின்றது.
நீண்டகால மதிப்பு உருவாக்கத்தில் உறுதியான கவனத்தைச் செலுத்துவதன் மூலம், MI Finance புதிய வாய்ப்புகளைக் கைக் கொள்வதற்கும், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அர்த்தமுள்ள பலன்களைத் தொடர்ந்து வழங்குவதற்கும் வலுவானதொரு நிலையை எய்தியுள்ளது.
MI Finance இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெராட் ஒன்டாட்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “எமது உரிமைப் பங்கு வழங்கலுக்குக் கிடைத்துள்ள பலத்த வரவேற்பு, MI Finance இன் மூலோபாயம் மற்றும் நீண்டகால தொலைநோக்கு பார்வை மீது எமது பங்குதாரர்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. வலுவான நிதிசார் அடித்தளத்துடன், புதிய வாய்ப்புகளை நோக்கி நகர்வதற்கும், அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நிலையான வளர்ச்சி மற்றும் நீடித்த மதிப்பை வழங்குவதற்கும் நாம் சிறந்ததொரு நிலையில் உள்ளோம்.” என்றார்.
இந்த உரிமைப் பங்கு வழங்கல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமை, ஒரு நிலையான மற்றும் முற்போக்கான நிதி நிறுவனம் என்ற வகையில் MI Finance இன் நிதி வலிமை, அது கொண்டுள்ள நம்பகத்தன்மை மற்றும் நிலையான, நீண்டகால வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் அட்வைசரி சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட், இந்த உரிமைப் பங்கு வழங்கலுக்கான ஆலோசகர் மற்றும் முகாமையாளராக செயலாற்றியதுடன், SSP கோர்பரேட் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட் பங்கு வழங்கலின் பதிவாளராக செயலாற்றியது.
