Jul 22, 2026 - 04:50 PM -
0
ஜெஃப்ரி பாவா மூனமல் விருது, இலங்கையில் வடிவமைப்பு பற்றிய ஒரு புதிய சிந்தனை முறையை அறிமுகப்படுத்துகிறது; இது மனிதர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில், அவர்களைச் சுற்றியுள்ள நிலம், நீர், வனவிலங்குகள் மற்றும் இயற்கை அமைப்புகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது, இயற்கையோடு மனிதன் இணைந்து வாழ்வதை ஊக்குவிக்கும் புத்தாக்கமான வடிவமைப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வடிவமைப்புகள், மீட்டெடுக்கப்பட்ட இயற்கை நிலப்பரப்புகள், பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த உள்கட்டமைப்புகள், சுற்றியுள்ள சூழலோடு ஒன்றிணைந்த பொது இடங்கள் அல்லது கட்டடச் சூழலின் வளர்ச்சியை அதிக பொறுப்புணர்வுடன் வழிநடத்தும் கொள்கைகள் எனப் பல பிரிவுகளில் அமையலாம்.
இந்த விருது, பெந்தோட்டையிலுள்ள ஜெஃப்ரி பாவாவின் தோட்டமான லுனுகங்கையில் உள்ள மூனமல் (Moonamal) என்ற மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்கு அடிப்படையாக விளங்கும் ஒரு எளிய கொள்கையை இந்த மரம் பிரதிபலிக்கிறது: ஒரு சிறந்த வடிவமைப்பு என்பது அந்த இடத்தை ஆக்கிரமிப்பதாக இல்லாமல், அதற்கு மதிப்பளித்து இணங்கிப்போவதாக இருக்க வேண்டும். மூனமல் விருதைப் பொறுத்தவரை, ஒரு இடத்தின் முக்கியத்துவம் என்பது அந்த நிலப்பகுதியின் கடந்தகால மற்றும் நிகழ்கால சுற்றுச்சூழல் தன்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
மூனமல் விருது என்பது மனித வாழ்விடங்களை வடிவமைப்பதற்கான மாற்று வழிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் ஒரு தேசிய தளமாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது” என சன்ன தாஸ்வத்த கூறினார். “இலங்கை ஏற்கனவே இயற்கையை மதித்து வடிவமைக்கும் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இதற்கு ரிட்டிகல (Ritigala) மற்றும் களுதிய பொக்குன (Kaludiya Pokuna) போன்ற பண்டைய இடங்களே சான்றாகும். இந்த பண்டைய முன்மாதிரிகளை தற்போதைய உலகளாவிய விவாதங்களுடன் நாம் இணைக்க வேண்டும். உதாரணமாக, சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பேணுவதுடன் பேரிடர் அபாயங்களைக் குறைக்கும் ‘ஸ்பாஞ்ச் சிட்டிஸ்’ (Sponge cities / கடற்பஞ்சு நகரங்கள்) மற்றும் மனித உட்கட்டமைப்புகளுக்கு மத்தியிலும் பல்லுயிர் வாழ அனுமதிக்கும் ‘நீண்ட தூர வனவிலங்கு வழித்தடங்கள்’ (Wildlife corridors) போன்ற கருத்துக்களைக் கூறலாம். இலங்கையில் இத்தகைய முயற்சிகளைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பதும், பல்வேறு அறிவு வடிவங்கள் ஒன்றாக இணையும் போது சிறந்த முடிவுகள் சாத்தியமாகும் என்பதைக் காட்டுவதுமே இந்த விருதின் நோக்கமாகும்.”
மூனமல் விருது இரண்டு பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை ஏற்கும். முதலாவது, கட்டடக்கலை, உட்கட்டமைப்பு, நகர மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் நிலப்பரப்பு வடிவமைப்பு (Landscape design) ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டடச் சூழல் (Built Environment) பிரிவு; இரண்டாவது, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுடன் கூடிய வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்களை சாத்தியமாக்கும் அல்லது ஊக்குவிக்கும் கொள்கைகளை அங்கீகரிக்கும் பொதுக் கொள்கை (Public Policy) பிரிவு ஆகும். இந்தத் திட்டம் இலங்கையில் செயல்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், தனிநபர்கள், அமைப்புகள், சமூகக் குழுக்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பல்துறை சார்ந்த கூட்டுக்குழுக்கள் (Multidisciplinary teams) என அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கலான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு, நிலையான கட்டுமானத்திற்கான தற்போதைய விதிமுறைகள் போதுமானதாக இல்லை என்பதை இந்த விருது சுட்டிக்காட்டுகிறது. எனவே, விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்காக நான்கு முக்கிய கொள்கைகளை இது முன்வைக்கிறது. அதன்படி, திட்டங்கள் மனிதர்களின் தேவைகளோடு சேர்த்து தாவரங்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்; சுற்றுச்சூழல் சேதங்களைச் சரிசெய்ய வேண்டும்; இயற்கை அமைப்புகள் மீண்டுவர உதவ வேண்டும்; மற்றும் பல்வேறு சமூகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையேயான கூட்டுமுயற்சியை உள்ளடக்க வேண்டும். மண் அரிப்பு, மாசுபட்ட நீர்நிலைகள், வாழ்விட இழப்பு, இயற்கை வளங்கள் மீதான அழுத்தம் மற்றும் சூழலுக்குப் பொருந்தாத கட்டுமானங்கள் போன்ற பிரச்சினைகளை நடைமுறை வழிகளில் கையாள்வதற்கு இந்தக் கொள்கைகள் வழிகாட்டுகின்றன.
இந்த விருது, மனித சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் எதனைச் சார்ந்துள்ளனவோ, அந்த இயற்கை அமைப்புகளைப் பலவீனப்படுத்தாமல் எவ்வாறு வளர முடியும் என்பது குறித்த பரந்த சர்வதேச விவாதத்திற்குள் இலங்கையையும் கொண்டு சேர்க்கிறது. உலகளாவிய உதாரணங்கள் பலவும் வசதி வாய்ப்புகள் மற்றும் வளங்கள் நிறைந்த நாடுகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற வேளையில், உலகளாவிய சிந்தனைகளை நமது உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றிச் செயல்படுத்தும் திட்டங்களை ஊக்குவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும்.
எதிர்காலத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்க நெருக்கடிகளின் பாதிப்புகள் மிகக் கடுமையாக உணரப்படவுள்ள குளோபல் சவுத் (Global South - வளரும் நாடுகள் வாழும் தென்பகுதி) சமூகங்களுக்கு, இத்தகைய தீர்வுகளை ஊக்குவிப்பது மிகவும் இன்றியமையாததாகும்” என்று சன்ன தாஸ்வத்த மேலும் கூறினார்.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 2026இல் இணையதளம் மூலமாகத் தொடங்கும். தகுதியான திட்டங்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அதோடு, அவற்றின் முடிவுகளைக் காலப்போக்கில் மதிப்பிடுவதற்கு ஏதுவாக, அவை நிறைவடைந்து குறைந்தது ஒரு வருடமாவது ஆகியிருக்க வேண்டும். இந்த தொடக்க நிகழ்விற்கான இறுதிப் பட்டியலும் (Shortlist) வெற்றியாளரும் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
