Header Logo
Mogo Academy

செய்திகள்
நீர்கொழும்பு சிறையில் குற்றம் நிகழ்ந்துள்ளதாக நீதவான் அறிவிப்பு

Jul 23, 2026 - 09:53 PM -

0

நீர்கொழும்பு சிறையில் குற்றம் நிகழ்ந்துள்ளதாக  நீதவான் அறிவிப்பு
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தின் போது குற்றம் ஒன்று இழைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் விசாரணை நடத்தி சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று (23) உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன், இச்சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் மரணத்திற்கான காரணங்கள் அறிவிக்கப்பட்ட 28 பேரில் 17 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களினாலும், 11 பேர் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பன்முகக் காயங்களினாலும் உயிரிழந்துள்ளதாக நீதவான் அறிவித்தார். 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் அடங்கிய மேலதிக அறிக்கையைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்தது. 

"விசாரணை தொடர்பில் இதுவரை சிறைச்சாலை அதிகாரிகள் 200 பேர், கைதிகள் 563 பேர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் 130 பேர், பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் மற்றும் சிவில் நபர்கள் 65 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணையை நாங்கள் ஜூலை 05 ஆம் திகதி முதல் நாள் தாக்குதல், ஜூலை 06 ஆம் திகதி இரண்டாம் நாள் தாக்குதல், நபர்கள் மரணமடைதல் மற்றும் சிறைச்சாலைச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய 3 பகுதிகளுக்கு அமைவாக மேற்கொண்டு வருகிறோம்." என்றனர். 

இதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விடயங்களைச் சமர்ப்பித்தனர். 

"இந்தச் சம்பவத்தின் போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைத் தலைமையகத்திலிருந்து அவசர தந்திரோபாயப் படையணியின் 89 அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வந்துள்ளனர். அவர்கள் 10 துப்பாக்கிகளையும் 300 ரவைகளையும் கொண்டு வந்துள்ளனர். அதில் 12 ரவைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, 10 துப்பாக்கிகளும் எஞ்சிய ரவைகளும் தற்போது விசாரணை அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. விசாரணைகளில் இதுவரை தெரியவந்தவற்றின்படி, இந்தச் சம்பவத்தில் மோதலுக்கான அடிப்படைக் காரணம் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவது குறித்து சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய கைதிகள் குழுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகும். பின்னர் அந்தத் தாக்குதல் அதிகாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மிக நுட்பமாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் திட்டமிடப்பட்ட சிறிய அளவிலான சிலரால் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, 40 சந்தேகநபர்களின் புனைப்பெயர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவர்களின் குறிப்பிட்ட அடையாளங்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன." என்றனர். 

இதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த கைதிகளுக்காகப் பாதிக்கப்பட்ட தரப்பாகச் சட்டத்தரணி சேனக பெரேரா சமர்ப்பணங்களை முன்வைத்தார். 

"இந்தச் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் ஆகிய இரு தரப்பினரும் உயிரிழந்தனர். முதல் நாள் மோதலுக்குப் பின்னர், இரண்டாம் நாள் சேதத்தைத் தவிர்ப்பதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்பது கடுமையான கேள்வியாகும். ஏன் முதல் நாள் கலவரத்துடன் தொடர்புடைய கைதிகள் மற்றைய கைதிகளிடமிருந்து பிரிக்கப்படவில்லை? இந்தச் சம்பவத்தின் போது சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தில் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் இருந்தனவா என்பதும் ஒரு கேள்வியாகும். எனவே, இங்கு கவனக்குறைவினாலும் மரணங்கள் சம்பவித்துள்ளமை தெளிவாகிறது. அதாவது, தண்டனைச் சட்டக்கோவையின் 298 ஆவது பிரிவான கவனக்குறைவினால் மரணத்தை விளைவித்தல் என்ற குற்றம் இங்கு இழைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறிய பகுதி ஒன்றின் ஊடாகச் சிறைச்சாலைக்குள் அதிகாரி ஒருவர் சுடுவதை நாங்கள் கண்டோம். தண்டனைச் சட்டக்கோவையின் 294 ஆவது பிரிவின் கீழ் வரும் மனிதக்கொலை குற்றத்தில் உள்ள 4 ஆவது பகுதியானது, எந்த வகையிலும் மரணம் சம்பவிக்கலாம் என்பதை அறிந்தே செய்யும் செயலாகும். இந்த விசாரணையைச் சமநிலையாக முன்னெடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்." என்றார். 

இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் உயிரிழந்த 28 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகளுக்கு இணங்க, ஒவ்வொரு மரணத்திற்கான காரணங்களையும் நீதவான் திறந்த நீதிமன்றத்தில் தனித்தனியாக அறிவித்தார். 

அதற்கமைய, மரணத்திற்கான காரணங்கள் அறிவிக்கப்பட்ட 28 பேரில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினாலும், 11 பேர் மழுங்கிய ஆயுதங்களால் ஏற்பட்ட பன்முகக் காயங்களினாலும் உயிரிழந்துள்ளதாக நீதவான் அறிவித்தார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

Mobitel Upahara