Jul 23, 2026 - 10:30 PM -
0
சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்காமல் செயற்பட்டு வந்த 41 தொழிற்சாலைகளை 2025 ஆம் ஆண்டில் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கட்டுவான பிரதேசத்தில் அண்மையில் தீ விபத்தினால் அழிவடைந்த தொழிற்சாலை தொடர்பில் விளக்கமளித்த குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ச இதனையும் வெளிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலை 2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.
"சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அளவுகோல்களை முறையாகப் பூர்த்தி செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு குறித்த தொழிற்சாலையின் நிர்வாகத்திற்கு நாம் பல சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமாகவும் வாய் மூலமாகவும் அறிவித்திருந்தோம். எனினும் அவர்கள் அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை" என அவர் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம், சுற்றுச்சூழல் விதிகளை மீறிய மேலும் 19 தொழிற்சாலைகள் 2025 ஆம் ஆண்டில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று 5 தொழிற்சாலைகளுக்குச் சட்டரீதியான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுற்றாடல் பாதுகாப்பு உரிம நிபந்தனைகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பில் உடனடி முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது எனவும், அதற்கான உரிய சட்ட முறைமை பின்பற்றப்படும் எனவும் பணிப்பாளர் நாயகம் இதன்போது மேலும் விளக்கமளித்தார்.
தொழிற்சாலையொன்றை மூடுவதற்குக் முன்னர், தற்போதுள்ள முரண்பாடுகளையும் குறைபாடுகளையும் திருத்திக்கொள்வதற்குத் தொழிற்சாலைகளுக்கு முதற்கட்டமாகச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
அதன் பின்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்கப்படாவிட்டால், களப் பரிசோதனைக்குப் பின்னர் உத்தியோகபூர்வ சட்டக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதுடன், அதைத் தாண்டி தொடர்ந்தும் உரிமமின்றித் தொழிற்சாலைகள் இயக்கப்படுமானால், சம்பந்தப்பட்ட பிராந்தியத்திற்கு உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நிறுவனங்களை மூடுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அதிகாரம் உள்ளது.
