Jul 24, 2026 - 03:30 PM -
0
செலான் வங்கி, Colombo EV Motor Show 2026 இன் உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக இணைந்து, கண்காட்சியில் தனது பங்களிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இது இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச மின்சார வாகனம் மற்றும் மோட்டார் வாகனப் பாகங்கள் கண்காட்சியுடனான வங்கியின் முதல் இணைவைக் குறிக்கின்றது. ஜூன் 26 முதல் 28 வரை சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மையத்தில் (BMICH) நடைபெற்ற இந்த மூன்று நாள் நிகழ்வு, 17,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்ததுடன், முன்னணி வாகன வர்த்தக நாமங்கள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் மின்சார வாகன ஆர்வலர்களையும் ஒன்றிணைத்தது.
உத்தியோகபூர்வ வங்கி மற்றும் லீசிங் பங்காளராக, செலான் வங்கியானது, செலான் லீசிங்கின் மின்சார வாகனங்களுக்கான நெகிழ்வான நிதித் தீர்வுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விரிவான தொகுப்பை கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. போட்டிமிக்க வட்டி வீதங்கள், கவர்ச்சிகரமான செயலாக்கக் கட்டணத் தள்ளுபடிகள், விரைவாக்கப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் வாகன உரிமையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட சௌகரியமான திருப்பிச் செலுத்தும் தெரிவுகள் ஆகியவற்றைக் கொண்ட பிரத்தியேக லீசிங் தொகுப்புக்களை ஆராய்ந்த பார்வையாளர்கள், நிகழ்வு முழுவதும் தனிப்பயனாக்கப்பட்ட நிதி ஆலோசனைகளையும் பெற்றனர்.
இக் கண்காட்சியில் மின்சார வாகனங்கள், மோட்டார் வாகனப் பாகங்கள், உதிரிப் பாகங்கள், lubricants, டயர்கள், பட்டரிகள், சார்ஜிங் (charging) தீர்வுகள் மற்றும் பரந்த அளவிலான வாகனத் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 200க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், செலான் வங்கி தனது Speed Drive லீசிங் வசதியையும் இந்நிகழ்வில் ஊக்குவித்தது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்கியதுடன் மூலதனத்தை திருப்பிச் செலுத்த தொடங்கும் முன் வட்டியை மட்டும் செலுத்துவதற்கு உதவுகிறது. மேலும், பார்வையாளர்கள் வங்கியின் கடனட்டை சேவை, டிஜிட்டல் வங்கித் தீர்வுகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பிற நிதித் தயாரிப்புகளையும் ஆராய்ந்தனர்.
செலான் வங்கியின் வெற்றிகரமான கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, Colombo EV Motor Show 2026இல் எமது பங்கேற்பானது, நிலையான போக்குவரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் செலான் வங்கியின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. பார்வையாளர்களின் அமோகமான ஆதரவும் ஆர்வமும் நெகிழ்வான மற்றும் புதுமையான நிதித் தீர்வுகளுக்கான வளர்ந்து வரும் தேவையை நிரூபிக்கின்றது. செலான் லீசிங், மின்சார வாகன உரிமையை எவ்வாறு மேலும் அணுகக்கூடியதாக மாற்றவல்லது என்பதை வெளிக்காட்டிய அதேவேளை, ஆயிரக்கணக்கான வருங்கால வாடிக்கையாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். என்றார்.
இது போன்ற முன்முயற்சிகள் மூலம், செலான் வங்கி நம்பகமான நிதிப் பங்காளியாகத் தொடர்ந்து தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டு, புதுமையான வங்கியியல் மற்றும் லீசிங் தீர்வுகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இலங்கையின் வளர்ந்து வரும் மின்சார வாகனச் சுற்றுச்சூழலுக்கு பங்களிக்கும் அதே வேளை, இலங்கை நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளை ஆதரிக்கிறது.
