Aug 1, 2026 - 08:58 PM
இலங்கை வந்துள்ள மூன்று ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணப்பையைத் திருடிய நபரை அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர்.
அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் நீராட சென்ற வேளையில், அதனைச் திருடிச் சென்றுள்ளார்.
அந்தப் பைகளில் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620 யூரோக்கள் மற்றும் ஆவணங்களும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் பணப்பைகளை திருடித் தப்பிச் செல்வதைக் கண்ட கடற்கரையிலிருந்த ஒருவர், உடனடியாக அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அதற்கமையச் செயற்பட்ட அருகம்பே விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விரைந்து செயற்பட்டு சம்பவம் இடம்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட பணத்துடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் நாணயங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொத்துவில் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

