Aug 12, 2026 - 10:15 AM

4 ஆவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில், சட்ட விதிகளின்படி தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு கோரி இந்திய அரச பெண் ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சசி குமாரி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிபதி மஞ்சு ராணி சவுகான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தனது 4 ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து, சம்பல் பிராந்தியக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவே குறித்த பெண் மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சட்டப்படி தனக்கு 6 மாத மகப்பேறு விடுப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.
விசாரணையின் போது, நடைமுறையிலுள்ள விதிகளின்படி மனுதாரருக்கு 4 ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை இல்லை என்பதால், மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.
எனினும், தனது முந்தைய 3 குழந்தைகள் பிறப்பின் போதும் தான் எந்தவொரு மகப்பேறு விடுப்பையும் பெறவில்லை என்றும், தற்போதே முதன்முறையாக விடுப்பு கோருவதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிசெய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்றுள்ளமை தொடர்பான சான்றுகளை அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதால், இந்த விடயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.















