Aug 19, 2026 - 05:21 PM





Vietjet கொழும்பு மற்றும் Ho Chi Minh City ஐ இணைக்கும் தனது புதிய நேரடி விமானச் சேவையை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான வான்வழி இணைப்பை வலுப்படுத்துவதுடன், தென்னாசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையே ஒரு புதிய பயண இணைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரடங்கிய விமான ஓட்டுநர் குழுவில் இரண்டு இலங்கை விமானிகளுடன் வருகை தந்திருந்த இந்த ஆரம்ப விமான சேவையை, இரு நாடுகளையும் சேர்ந்த அரச அதிகாரிகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் விமானப் போக்குவரத்துப் பங்குதாரர்களை ஒன்றிணைத்த ஒரு வைபவ நிகழ்வுடன் கொண்டாடப்பட்டது.
ஆகஸ்ட் 18 ஆம் திகதி மாலை Ho Chi Minh City இலுள்ள Tan Son Nhat சர்வதேச விமான நிலையத்திலிருந்து VJ1875 விமானம் புறப்படுவதற்கு முன்னர், Vietjet தலைவர்கள், விமானக் குழுவினருக்கும் பயணிகளுக்கும் மலர்க்கொத்து வழங்கி, இந்த தொடக்கப் பயணத்திற்குத் தங்களின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். குறிப்பாக, இவ்விமானத்தை இயக்கிய மூன்று விமானிகளில் இருவர் இலங்கை விமானிகள் ஆவர் – கப்டன் யொன்மெரெஞ்ஞ சீமொன் ஹேவகே திவங்க சில்வா மற்றும் முதல் அதிகாரி ரண்தில் ஹஷேன் பெரேரா – இது இந்த புதிய சேவையின் பின்னணியில் உள்ள வலுவான உள்ளூர் தொடர்பை வெளிப்படுத்துகிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், விமானத்திற்கு பிரமாண்டமான நீர் தெளிப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உள்ளூர் விருந்தோம்பலின் அடையாளமாக பயணிகள் மலர் மாலைகள் மற்றும் இலங்கை தேயிலை பரிசுப் பொதிகளுடன் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
விருந்தினர்கள் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விற்காக Silk Route வரவேற்பறைக்குத் திரும்புவதற்கு முன்னர், வருகை தரும் முனையத்தில் பாரம்பரிய இலங்கை கலாசார நடனத்துடன் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. அங்கு, துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுத்துறை அமைச்சர் அனுர கருணாதிலக்க; சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க; இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வியட்நாம் தூதுவர் திருமதி ஜின் தி தம் (Trinh Thi Tam) மற்றும் வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போஷித பெரேரா ஆகியோர் Vietjet மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் இணைந்து, பாரம்பரிய இலங்கை மங்கல விளக்கேற்றும் நிகழ்விலும் தொடக்க விழா கேக் வெட்டும் நிகழ்விலும் பங்கேற்றதுடன், புதிய நேரடி சேவையைப் பாராட்டும் உரைகளும் இடம்பெற்றன.
கொழும்பு – Ho Chi Minh City இடையிலான இந்த வான்வழிப் பாதை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறது. இது இலங்கைப் பயணிகளுக்கு தெற்கு வியட்நாமுக்கு நேரடி மற்றும் வசதியான இணைப்பை வழங்குகிறது. விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரவு 23:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 05:55 மணிக்கு Tan Son Nhat சர்வதேச விமான நிலையத்தை அடைகின்றன. இதேவேளை, மறுமார்க்கச் சேவையானது Ho Chi Minh City இலிருந்து மாலை 18:15 மணிக்கு புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி இரவு 21:50 மணிக்கு கொழும்பை வந்தடைகிறது.
இந்தப் புதிய சேவை, தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவின் இரு துடிப்பான வணிக மற்றும் சுற்றுலா மையங்களான கொழும்பு மற்றும் Ho Chi Minh City ஐ மிக எளிதில் சென்றடையும் தூரத்திற்குக் கொண்டு வருவதுடன், பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இலங்கை வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்கள், சுவையான உணவுகள் மற்றும் நவீன நகர வாழ்க்கை ஆகியவற்றின் கலவையை வழங்கும் Ho Chi Minh City, தென்கிழக்காசியாவிற்கான ஒரு நுழைவாயிலாக அமைவதுடன், வியட்நாம் முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களுக்கும் ஒட்டுமொத்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கும் அப் பாதையை இணைக்கும் Vietjet இன் பரந்த வான்வழி வலையமைப்பையும் ஒருங்கிணைக்கிறது. இந்த நேரடி இணைப்பானது வியட்நாம் மற்றும் Vietjet இன் ஏனைய சர்வதேச சந்தைகளில் இருந்து வருகை தரும் பயணிகள் இலங்கையைக் கண்டறிவதையும் எளிதாக்குகிறது. வெப்பமண்டலக் கடற்கரைகள், செழிப்பான தேயிலை தோட்டங்கள் முதல் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பலதரப்பட்ட இயற்கை அம்சங்கள் வரை, இந்தியப் பெருங்கடலின் முத்து (Pearl of the Indian Ocean) சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு வசதியான ஆரம்பப் புள்ளியாக கொழும்பு விளங்குகிறது.
Vietjet மூலம் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இந்த அனுபவம் வெறும் வான்வழி இணைப்பிற்கு அப்பாலும் நீள்கிறது. எரிபொருள் சிக்கனமிக்க விமானத் தொடரில் நவீன விமானப் பயண அனுபவத்தையும், தொழில்முறை மற்றும் ஆற்றல்மிக்க பணிப்பெண்கள்/பணியாளர்களின் கவனமிக்க சேவையையும் அவர்கள் பெறுகின்றனர். மேலும், பயணிகள் Pho, Banh mi மற்றும் வியட்நாமிய ஐஸ் மில்க் கோப்பி உட்பட, வியட்நாமிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவுகளை புதிதாக தயாரிக்கப்பட்ட சூடான உணவுகளாக உண்டு மகிழலாம். இது பயணத்தின் போது வியட்நாமின் சுவையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
Vietjet பற்றி:
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

























