Aug 20, 2026 - 01:26 PM





அபாரமான விளையாட்டுத் திறமையையும் அசைக்க முடியாத குழு உணர்வையும் வெளிப்படுத்திய செலான் வங்கி, 40 ஆவது மெர்க்கன்டைல் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 44 முன்னணி நிறுவன அணிகளுக்கு மத்தியில் 11ஆவது இடத்தைப் பிடித்து சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது.
தொழில்முறை சாதனைகளுடன் விளையாட்டுத் திறமையையும் வளர்ப்பதில் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், செலானின் தடகள அணி 8 தங்கங்கள், 2 வெள்ளிகள் மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்று சிறப்பான சாதனைப் பட்டியலுடன் சாம்பியன்ஷிப்பை நிறைவு செய்தது.
இக் குறிப்பிடத்தக்க திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக, 2026 ஜூன் 26 அன்று பத்தரமுல்லவில் உள்ள Waters Edge இல் நடைபெற்ற மெர்க்கன்டைல் தடகள விருதுகள் 2025 விழாவில், செலானின் தடகள வீரர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற A.R.சாமிக வீரவதன, ஒட்டுமொத்த சிறந்த ஆடவர் தடகள வீரராக முடிசூட்டப்பட்டு, பாராட்டுக்களில் முதலிடம் பிடித்தார். இவர் 400m ஓட்டப்பந்தயத்தில் புதிய போட்டிச் சாதனையை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது. உயரம் பாய்தலில் புதிய போட்டிச் சாதனை உட்பட 3 தங்கப் பதக்கங்களை வென்ற K.A.D.திசத் தெனக மொவிந்து தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும், சாம்பியன்ஷிப் முழுவதும் அவரது சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், Novice ஆடவர் பிரிவில் - சிறந்த தடகள வீரர் என்ற கௌரவத்தையும் பெற்றார்.
செலான் வங்கியைச் சேர்ந்த இரண்டு தடகள வீரர்கள் வெள்ளி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். I.D.நெலுகா சஞ்சீவனி பெர்னாண்டோ ஒரு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றதன் மூலம் இக் கௌரவத்தைப் பெற்றார். அதேவேளை, கிஹான் ரணவீர சாம்பியன்ஷிப் போட்டிகளின் போது ஒரு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றதற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
விளையாட்டுத் திறமைகளுக்கு அப்பாற்பட்டு, மெர்க்கன்டைல் தடகள சங்கத்திற்கு ரமேஷ் சமிகர ஜயரத்ன உதவிப் பொருளாளராக ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு பங்களிப்புக்கான விருது வழங்கப்பட்டது.
இச் சாதனை குறித்துக் கருத்து தெரிவித்த செலான் விளையாட்டுக் கழகத்தின் தலைமை மாற்ற அதிகாரி மற்றும் தலைவர் வருண கொக்கலகே:
இச் சாதனைகள் செலான் வங்கியின் பெயரை பெருமிதத்துடன் தொடர்ந்து உயர்த்தி வரும் எங்கள் விளையாட்டு வீரர்களின் ஆர்வம், ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாட்டிற்கு சான்றாகும். அவர்களின் வெற்றியானது வங்கியின் ஒற்றுமை மற்றும் விடாமுயற்சியின் வலுவான கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இக் குறிப்பிடத்தக்க சாதனையில் பங்காற்றிய அனைத்து விளையாட்டு வீரர்களையும் அதிகாரிகளையும் மனமாரப் பாராட்டுகிறோம். அவர்கள் உலக அரங்கில் மேலும் பல வெற்றிகளைப் பதிவுசெய்ய தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். என்றார்.
பணியிடத்திலும் விளையாட்டு அரங்கிலும் சிறந்து விளங்கும் கலாச்சாரத்தை தொடர்ந்து ஆதரித்து வரும், செலான் வங்கி அதன் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர்களின் சிறந்த சாதனைகளுக்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் பல வெற்றிகளை எதிர்பார்க்கிறது.

























