Sep 5, 2026 - 06:34 AM

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக நீர் எடுக்கும் நோக்கில் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இத்துயரச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்பக்கத்தில், உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன திணைக்களத்தினால் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாலம் கட்டுமானப் பணிக்காகத் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு மிக அருகில் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு பாரிய குழியைத் தோண்டியுள்ளது.
அவ்வாறு குடியிருப்பு மற்றும் வேலிக்கு அருகில் பெரிய குழியைத் தோண்டியபோதிலும், அதற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்படாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று பகல் 11.00 மணியளவில் சிறுவன் தன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அக்குழியில் தவறி விழுந்துள்ளான்.
குழியில் விழுந்த சிறுவனை உடனடியாக மீட்டு கரடியனாறு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தபோதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு, சிறுவனின் உடலைப் பார்வையிட்ட பின் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகளுடன் ஆயித்தியமலை பொலிஸார் மேல் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
பாலம் புனரமைப்புப் பணியின்போது எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாததே இந்த அனர்த்தத்திற்கு முதன்மைக் காரணம் என அப்பகுதி பொதுமக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் விசனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.





























