Sep 7, 2026 - 08:50 PM

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.
குறித்த கோரிக்கை தொடர்பில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதன்படி, நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாராளுமன்றச் செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு அமைவாக, நாமல் ராஜபக்ஷ நாளை (08) பாராளுமன்றத்திற்கு வருகை தர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றம் நாளை முதல் வரும் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

























