Sep 12, 2026 - 01:00 PM

யாழ்ப்பாணத்தில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த வயது 33 வயதான குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர் இவரைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரைத் தேடிக் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





























