Sep 14, 2026 - 08:41 AM

டுபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இருப்பினும், போட்டியின் முடிவில் ஆசியக் கிரிக்கெட் சபையின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி மறுத்துவிட்டது.
முதலில் துடுப்பாடிய செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஷபாலி வர்மா (68) மற்றும் ஸ்மிருதி மந்தனா (59) இணைந்து 129 ஓட்டங்களை சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.
இறுதியில் 184 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நக்வியிடமிருந்து ஆசிய கிண்ணத்தை பெற முடியாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தது.
ஏசிசி துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி மூலம் கிண்ணத்தை இந்திய அணிக்கு வழங்கலாம், வெற்றி பெற்ற நாட்டின் கிரிக்கெட் சபை பிரதிநிதி கிண்ணத்தை வழங்கலாம் என இந்திய அணி தரப்பு தெரிவித்தது.
ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளையும் நக்வி நிராகரித்து, தான் தான் கோப்பையை வழங்குவேன் என தெரிவித்தார்.
இதன் காரணமாக, இந்திய அணி கிண்ணத்தையோ அல்லது வெற்றிப் பதக்கங்களையோ பெறாமல் விழாவைப் புறக்கணித்தது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார்
இது பிசிசிஐ எடுத்த கொள்கை முடிவு, நாங்கள் எங்கள் சபையின் முடிவிற்குத் துணை நிற்கிறோம்.
எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முடிந்துவிட்டது. மைதானத்தின் பெரிய திரையிலேயே இந்தியா ஆசியக் கிண்ணம் 2026 சாம்பியன் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.
2025 ஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கசப்பால் நக்வியிடம் இந்திய அணி கிண்ணத்தை வாங்க மறுத்தது.
மோஷின் சின் நக்வி தற்போது பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டமைச்சர் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.
ஒரு நாட்டின் உள்நாட்டமைச்சராக இருக்கும் நபர், சர்வதேச ஆசியக் கிரிக்கெட் சபையின் தலைவராகவும் முரண்பாடுகளை உருவாக்குகிறது என்ற விமர்சனம் உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அங்கு செல்ல மறுத்தது. அப்போது இந்தியாவிற்கு எதிராகக் கடுமையான கருத்துகளை நக்வி தெரிவித்திருந்தார்.
போர் தான் உங்களுடைய பெருமையின் அளவுகோல் என்றால், வரலாறு ஏற்கனவே பாகிஸ்தானின் கைகளில் உங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விகளைப் பதிவு செய்துள்ளது என 1999 இல் கார்கில் போரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதுபோல சித்தரித்து நக்வி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.





























