Sep 14, 2026 - 11:16 AM

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில், சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முற்பட்ட 11 வயது சிறுவன் ஒருவர் முச்சக்கர வண்டியொன்றில் மோதி காயமடைந்த சம்பவம் கடந்த 11 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பான CCTV காட்சிகள் ஆலயத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன.
பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முற்பட்ட சிறுவன் மீது முச்சக்கர வண்டி மோதும் விதமும், அதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி சம்பவ இடத்திலிருந்து சென்றுவிடும் காட்சிகளும் CCTV பதிவில் இடம்பெற்றுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியை அடையாளம் காணும் நடவடிக்கைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் மூலம் முச்சக்கர வண்டி சாரதியின் தொலைபேசி இலக்கம் கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த சாரதிக்கு பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். இன்று (14) காலை நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடையுமாறு சாரதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





























