Sep 24, 2026 - 08:03 AM

“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் இன்று (24) முற்பகல் நடைபெறவுள்ளது.
பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் முற்பகல் 09.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வாதிகாரப் பயணத்திற்கு வித்திடும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் நடத்தப்படுவதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட மையம் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளது.
நிலவும் சர்ச்சைக்கூரிய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒரே பொது மேடையில் ஒன்றிணைத்து, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பரந்த மற்றும் பலமான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கமாக இருந்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்பார்க்கப்பட்ட முறையில் போராட்டம் முன்னெடுக்கப்படாமை குறித்து விசனம் தெரிவிப்பதாகவும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட மையம் கூறியுள்ளது.































