Sep 24, 2026 - 07:19 PM

நாடு முழுவதிலும் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்வில் தித்வா புயல் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை கவனத்தில் கொண்டு, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்க டோக்கியோ சீமெந்து குழுமம் முன்வந்துள்ளது.
புயல் அனர்த்தத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவுமாறு நன்கொடை அமைப்புகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களிடம் அரசாங்கம் மேற்கொண்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் 1 முதல் 18 வயது வரையான சுமார் 79 பாடசாலை மாணவர்கள் அவசரத் தேவையைக் கொண்டிருப்பதாக டோக்கியோ சீமெந்து இனங்கண்டிருந்தது. இந்த அனர்த்தத்தினால் இச்சிறுவர்கள் தமது ஒரு அல்லது இரு பெற்றோரையும் இழந்திருந்தனர். மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை தடங்கல்களின்றி தொடர்வதற்கு இந்தச் சிறுவர்களுக்கு உதவும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு பிள்ளைக்கும் மாதாந்தம் ரூ. 5000 கல்விக் கொடுப்பனவாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்க நிறுவனம் முன்வந்திருந்தது. அதன் பிரகாரம், 2026 ஜுலை மாதம் முதல் இந்தத் தொகை வழங்கும் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. கண்டி மாவட்டத்திலிருந்து 48 சிறுவர்களுக்கும், பதுளை மாவட்டத்திலிருந்து 31 சிறுவர்களுக்கும் இந்தத் திட்டத்தினூடாக உதவிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தச் சிறுவர்கள் தற்போது தமது குடும்ப மேற்பார்வையாளர்களின் பராமரிப்பில் வசிப்பதுடன், அவர்களின் நலன்புரிச் செயற்பாடுகளை உரிய மாவட்ட செயலகங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை அதிகார அமைப்புகள் போன்றன மேற்கொள்கின்றன.
கண்டி மற்றும் பதுளை மாவட்ட செயலகங்களுடன் நெருக்கமான பங்காண்மையுடன் டோக்கியோ சீமெந்து குழுமம் செயலாற்றி, சிறுவர்களின் பராமரிப்பு பொறுப்பை வகிப்போரின் வங்கிக் கணக்குகளில் இந்தத் தொகையை நேரடியாக வைப்புச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அவர்களின் கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிதிச் சுமையை குறைப்பதை இலக்காகக் கொண்டதாக இந்த மாதாந்தத் தொகை அமைந்துள்ளதுடன், தமக்கான பயிலும், மேம்படும் மற்றும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை தடுக்கும் வகையில் இந்த தடங்கல் அல்லது அனர்த்தம் அமைந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் விசேட நிகழ்வு அண்மையில் கண்டி மற்றும் பதுளை மாவட்ட செயலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகளின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிர்வாக அதிகாரி திருமதி. பூர்ணிமா பஸ்நாயக்க மற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு அதிகாரி திருமதி. ரேணுகா ஆகியோருடன், இந்நிகழ்வுகளில் டோக்கியோ சீமெந்து குழும்பத்தின் கூட்டாண்மை பொறுப்புணர்வு முகாமையாளர் சலிந்த கந்தபொல, செயற்திட்ட ஒழுங்கிணைப்பாளர் மஞ்சுள பியசேன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், தமது வாழ்வின் முக்கியமான நிலையில் காணப்படும் சிறுவர்களுக்கு நிதி உதவியைப் பெற்றுக் கொடுப்பதற்கு என்பதற்கு மேலானதாக அமைந்துள்ளது. எதிர்காலத்திற்கான புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கவும், இன்னல்களை முறியடிக்கவும் ஒரு சிறுவருக்கு கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்றாகக் கல்வி திகழ்கின்றது என்ற குழுமத்தின் நம்பிக்கையை இந்த மூன்றாண்டு கால அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது. இச் சிறுவர்கள் இழந்துவிட்ட இழப்புகளுக்கு எத்தகைய ஆதரவும் ஈடாக முடியாது என்றாலும், பரஸ்பர ஆதரவை வெளிப்படுத்தும் இந்தச் சிறிய முயற்சி, அவர்களின் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான ஊக்கத்தையும் தைரியத்தையும் வழங்கும் என்றும், அவர்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் நோக்கிப் பயணிக்க அவர்களுக்கு வலுவூட்டும் என்றும் டோக்கியோ சீமெந்து குழுமம் நம்புகிறது.































