Sep 26, 2026 - 01:15 PM

ஈரானிய விமானங்களுக்குச் சேவை வழங்கும் அல்லது உதவிகளைச் செய்யும் விமான நிலையங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் அண்மையில் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இதிலிருந்து சில ஈராக் விமான நிலையங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அமெரிக்காவிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈராக் பிரதமர் அலி அல்-ஸைதியின் (Ali al-Zaidi) அலுவலகம் தெரிவித்துள்ளது.
மருத்துவச் சிகிச்சை, கல்வி, ஆன்மீகச் சுற்றுலாக்கள் மற்றும் சிவிலியன்களின் நலன் சார்ந்த மனிதநேயக் காரணங்களுக்காக விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "இப்பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க ஈராக் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
எனினும், தொடர்ச்சியான நெருக்கடிகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
இதன் மூலம் பிராந்திய நாடுகளினதும் மக்களினதும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய மோதல்களுக்குத் தீர்வு காண வேண்டும்" என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.































