Sep 29, 2026 - 09:21 PM

இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வேய் ஹுவாஷியாங் மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொது நிர்வாக மறுசீரமைப்பு, பிரதேச ஆட்சி, அனர்த்த முகாமைத்துவம், தூய்மையான குடிநீர் மற்றும் AI தொழில்நுட்பம் சார்ந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு ஆகியன தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால இராஜதந்திர மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பொது நிர்வாகத் துறையை நவீனமயமாக்குதல், பிரதேச மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் திறன் அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவ பொறிமுறைகள், தூய்மையான குடிநீர் திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் முக்கிய கவனம் செலுத்தினர்.
கலந்துரையாடலின் தொடக்கத்தில் உரையாற்றிய சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங், சீனா- இலங்கை வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை தொடர்ந்து பேணி வருவதாகவும், சீனா இலங்கைக்கு வழங்கும் எந்தவொரு உதவிக்கும் எந்தவொரு அரசியல் நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும், தற்போதும் எதிர்காலத்திலும் இந்த வெளியுறவுக் கொள்கை மாற்றமின்றி தொடரும் என்றும் வலியுறுத்தினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பொது நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்தல், மனிதவள முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல், அரசாங்க சேவையின் திறனை அதிகரித்தல், ஊழலை ஒழித்தல் மற்றும் டிஜிட்டல் ஆளுகையை நோக்கி நகர்வது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வமைச்சின் கீழ் பொது நிர்வாகம் தவிர உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ஆகிய பாடப்பரப்புகளும் அடங்குவதால், பிரதேச மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுமைத் திறனை அதிகரித்தல், வருவாய் வழிகளை மேம்படுத்துதல் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் சீனாவின் வெற்றிகரமான அனுபவங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் பெருமளவிலான அரச ஊழியர்கள் இருந்தபோதிலும், ஆண்டுதோறும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கே வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புகள் கிடைப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நமது அரச அதிகாரிகளுக்கு சீனாவில் உயர் கல்வி மற்றும் நடைமுறைப் பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு நேர்மறையான பதிலைளித்த தூதர் வேய் ஹுவாஷியாங், இலங்கையின் பிரதேச மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்காக விசேட திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
உலகளாவிய பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் அவசர பேரிடர் சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக சீனா அண்மையில் உருவாக்கிய, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான நவீன வானிலை மற்றும் புவியியல் அனர்த்த எச்சரிக்கை முன் அறிவிப்பு அமைப்பை (AI-powered early warning system) இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தூதர் விளக்கமளித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கிராமப்புற மற்றும் விவசாய சமூகங்கள் எதிர்கொள்ளும் தூய்மையான குடிநீர் பற்றாக்குறை மற்றும் சிறுநீரக நோய் (CKDu) நிலைமை குறித்தும் இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.































