Oct 14, 2026 - 02:21 PM -
0

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான ‘ஸ்வர மஞ்சரி – 2026’ இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தெரிவாகியுள்ளனர்.
இப்போட்டியின் இறுதிச் சுற்று நாளை (15) பத்தரமுல்லை சுஹுருபாய கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 போட்டியாளர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகியோர் அடங்குகின்றனர்.
இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவுள்ள இருவரும் இன்று (14) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
இதன்போது, போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெறுவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அரசாங்க அதிபர் இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி. உமாசங்கர் மற்றும் யாழ்ப்பாணப் பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ற. தர்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.














































