Oct 14, 2026 - 11:15 PM

சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) மூலம் சிவப்பு அறிவித்தலை (Red Notice) பெறுவதற்காக இந்த பிடியாணையைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
2014 ஆம் ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபா நிதியை, ஊவா மாகாண சபை தேர்தலின் போது 12,000 டி-ஷர்ட்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தி அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உட்பட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான பெசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக, அவரது முகவரியாகக் கருதப்படும் மெதமுலன, வீரகெட்டிய பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்றபோதிலும் அவர் அங்கு இல்லை என அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
அங்கு குறித்த பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் மற்றும் சந்தேகநபரின் குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அதன்படி சந்தேகநபர் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய, சந்தேகநபரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவித்தலை பெறுவதற்குத் தேவையான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
இந்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கோட்டை நீதிவான் பசன் அமரசேன, சந்தேகநபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டதுடன், அதற்குரிய பிடியாணையை ஆங்கில மொழியில் வழங்குமாறும் உத்தரவிட்டார்.
அதன்மூலம் சந்தேகநபரை கைது செய்ய சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தலை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
































