Oct 9, 2026 - 06:53 AM

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு மத்திய குற்ற விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகின.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி, சந்தேகநபர் தனது மகன், தந்தை மற்றும் நெருங்கிய உறவினர் ஒருவரின் பெயர்களில் இந்தச் சொத்துக்களைக் கொள்முதல் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த சொத்துக்களை விற்பனை செய்வதையோ, வேறொருவருக்குக் கைமாற்றுவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடுக்கும் வகையில் நேற்று (8) முதல்) 14 நாட்களுக்கு முடக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் பொரலஸ்கமுவ, தெஹிவளை வீதியில் அமைந்துள்ள 3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய உடற்பயிற்சி மையம், தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள 3.5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணிகள், அதில் அமைக்கப்பட்ட சுற்றுலா விடுதி மற்றும் ஒரு வீடு என்பன அடங்குகின்றன.
அத்துடன், யக்கல பகுதியில் அமைந்துள்ள சுமார் 3 கோடி ரூபா பெறுமதியுடைய ஆடம்பர வீட்டு வளாகத்திலுள்ள வீடொன்றும் இதில் உள்ளடங்குகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்ற விசாரணைப் பணியகம் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


































