Nov 24, 2026 - 03:01 PM

‘டிட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இந்திய அரசின் நன்கொடை உதவியின் கீழ் அறிவிக்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பொதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான இந்தியப் பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ரயில் பாதை கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருதல் மற்றும் தற்காலிக, நிரந்தரப் பாலங்களை அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களின் துரித முன்னேற்றம் குறித்து இரு தரப்பினராலும் திருப்தி வெளியிடப்பட்டது.
அத்துடன், வீட்டுப் புனரமைப்பு உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் முழுமையாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்தியக் கடன் வசதியின் கீழ் வாகனங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் கால்நடை வளங்களை வழங்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

































