Nov 23, 2026 - 03:43 PM

இலங்கையின் ஒரேயொரு முழுமையான ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தியாளரும், சந்தையில் முன்னணி நிறுவனமுமான INSEE Lanka, ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2026இல் மதிப்புமிக்க தங்கப் பாராட்டு விருதைப் பெற்றுள்ளது. இவ்விருதானது, கனிமவளங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தித் துறையில் சுற்றாடல் நிலைபேறாண்மைக்கு நிறுவனம் வழங்கிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வு, 2026 ஒக்டோபர் 19ஆம் திகதி BMICH இன் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விருது, INSEEஇன் Sustainability Ambition 2030 திட்டத்தின் வெற்றிக்கு வலிமையான சான்றாக விளங்குகின்றது. நிறுவனத்தின் நிலைபேறான அபிவிருத்திப் பயணத்தின் மையமாக விளங்கும் இத்திட்டம், அதன் சுற்றாடல் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும் விரிவான செயல்திட்டமாக அமைந்துள்ளது.
இது குறித்து INSEE Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் குணவர்னசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “INSEE நிறுவனத்தில் உள்ள எம் அனைவருக்கும் இது பெருமைமிக்க தருணமாகும். இத் தேசிய மட்ட அங்கீகாரம், பொறுப்புணர்வுடனான செயற்பாடுகள், புத்தாக்கம் மற்றும் நீண்டகால சுற்றாடல் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஊடாக துறையின் வளர்ச்சியையும் சுற்றாடல் பாதுகாப்பையும் ஒருங்கே செயற்படுத்த முடியும் என்பதை INSEE தொடர்ந்து நிரூபித்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.
INSEE நிறுவனத்தின் Sustainability Ambition 2030 திட்டம் ஐந்து முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவை காலநிலை மற்றும் வலுசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், உயிர்ப்பல்வகைமை மற்றும் நீர், சமூக மற்றும் பங்குதாரர் ஈடுபாடு, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியனவாகும்.
காலநிலை மற்றும் வலுசக்தி என்ற அம்சத்தின் கீழ் INSEE, குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்ட சீமெந்து உற்பத்தியை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டில், வழமையான Ordinary Portland Cement (OPC) உடன் ஒப்பிடுகையில் CO₂ வெளியேற்றத்தைக் குறைக்கும் Portland Composite Cement (PCC) வகை சீமெந்தை சந்தைக்கு அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக INSEE திகழ்ந்தது. நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களில் தங்கியிருப்பதைக் குறைக்கும் வகையில், குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்ட சீமெந்து உற்பத்தியை ஊக்குவித்தல், வலுசக்தி வினைத்திறனை மேம்படுத்துதல் மற்றும் கழிவுகளிலிருந்து பெறப்படும் மாற்று எரிபொருட்களின் மூலம் வெப்பசக்திப் பயன்பாட்டை அதிகரித்தல் ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.
நிறுவனத்தின் விசேட கழிவு முகாமைத்துவப் பிரிவான INSEE Ecocycle ஊடாக, சீமெந்து சூளைகளில் கழிவுகளை இணைச் செயலாக்கம் (Co-processing) செய்வதன் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. இச்செயன்முறையின் மூலம் கைத்தொழில் கழிவுகள் மாற்று எரிபொருட்களாகவும் சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. அத்துடன், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருளான Fly Ash ஐ, சீமெந்து உற்பத்தியில் துணை மூலப்பொருளாக மீண்டும் பயன்படுத்தி வருகிறது. கைத்தொழில் துறைகளுக்கு இடையிலான இத்தகைய வளப் பயன்பாட்டின் மூலம், Clinker பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சீமெந்து உற்பத்தியினால் ஏற்படும் காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகிய நன்மைகளை நிறுவனம் பெற்றுக்கொள்கிறது.
இக் கைத்தொழில் புத்தாக்க முயற்சிகளுக்கு இணையாக, உள்ளூர் உயிர்ப்பல்வகைமை மற்றும் சூழலியல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதிலும் INSEE தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சுண்ணாம்புக்கல் அகழ்வுப் பகுதிகளை முழுமையாக மீளமைத்தல், அருவாக்கலு அகழ்வுப் பகுதியில் விலங்குகளை மீட்டுப் பாதுகாத்து மீண்டும் இயற்கைச் சூழலில் விடுவிக்கும் திட்டத்தை முன்னெடுத்தல், கண்டல் காடுகளை மீளமைத்தல், மழைநீர் சேகரிப்பு (rainwater harvesting) மற்றும் மேற்பரப்பு நீரின் (surface-water) பயன்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகியன இதில் அடங்குகின்றன. தொழிற்பயிற்சி, பாடசாலைகளுக்கான கல்வி உதவிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு முன்முயற்சிகள் ஊடாக உள்ளூர் சமூகங்களுக்கும் நிறுவனம் ஆதரவளித்து வருகிறது. இதேவேளை, தனது அனைத்து வணிகச் செயற்பாடுகளிலும் மதிப்புச்சங்கிலி முழுவதிலும் 'Zero Harm to People' என்பதை நோக்கியும் INSEE தொடர்ந்து பயணித்து வருகிறது.
இந்த முயற்சிகளுக்கான அங்கீகாரமாக, இலங்கையில் EPD International சான்றிதழைப் பெற்ற முதலாவது மற்றும் ஒரேயொரு சீமெந்து நிறுவனமாக INSEE திகழ்கிறது. அத்துடன், இலங்கையில் Eco Label சான்றிதழைப் பெற்ற முதலாவது சீமெந்து வர்த்தகநாமம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும், நிலைபேறான உற்பத்திச் செயற்பாட்டிற்காக Green Building Council of Sri Lanka நிறுவனத்திடமிருந்து 05 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச் சாதனைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல முகாமைத்துவக் கட்டமைப்புகளின் கீழ் INSEE தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தர முகாமைத்துவத்திற்கான ISO 9001, சுற்றாடல் முகாமைத்துவத்திற்கான ISO 14001, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான ISO 45001, வலுசக்தி முகாமைத்துவத்திற்கான ISO 50001, வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்பிற்கான ISO 39001, ஆய்வுகூடத் திறனுக்கான ISO 17025 மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான ISO 10004 உள்ளிட்ட பல சர்வதேச தரச்சான்றிதழ்களை நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த அங்கீகாரம், பொறுப்புணர்வுடனான உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக கட்டமைக்கப்பட்ட சூழலில் (Built Environment) நிலைபேறான மாற்றத்தை ஏற்படுத்துவதில் INSEE கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. எதிர்காலத் தலைமுறைகளுக்கும் நீடித்த பெறுமதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நிறுவனம் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது.
































