Nov 23, 2026 - 02:07 PM

தனுஷின் 'ஓம்' திரைப்படம் 3 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஓம்: ஆபரேஷன் மோல்’ (O.M: Operation Mole) திரைப்படம், வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் ரூ.101.7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அந்த வகையில், தனுஷ் உடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள ‘ஓம்: ஆபரேஷன் மோல்’ திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
செம்மரக் கடத்தலைத் தடுக்க மேற்கொள்ளப்படும் ரகசிய உளவு நடவடிக்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தை வொண்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar Films) நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், தனுஷின் நட்சத்திர அந்தஸ்து மற்றும் படத்தின் பிரம்மாண்டம் காரணமாகப் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.
வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.40 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து, தனுஷின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓபனிங் (Career-Best Opening) பெற்ற திரைப்படமாக இது அமைந்தது.
தொடர்ந்து இரண்டாவது நாளிலும் உலகளாவிய மொத்த வசூல் ரூ.75 கோடியைத் தாண்டிய நிலையில், மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையும் சேர்த்து, வெறும் மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் ரூ.101.7 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
































