Nov 23, 2026 - 01:50 PM

முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' (PSTA) தொடர்பில் பரவலான பொதுமக்கள் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்படும் வரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) பதற்றமான சூழல் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை முன்வைத்துப் பேசிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பொதுமக்கள் கலந்தாலோசனைகள் நடத்தப்படும் என நவம்பர் 7ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்திருந்த போதிலும், ஆளுகை தொடர்பான
துறைசார் மேற்பார்வைக் குழு இன்று பிற்பகல் கூடி குறித்த சட்டமூலம் குறித்து ஆராயவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பைசர் முஸ்தபா, அஜித் பி. பெரேரா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் தாமும் உள்ளடங்களாகக் குழுவின் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து, குழு விவாதங்களை முன்னெடுத்தாலும் இறுதி முடிவெடுப்பதைத் தவிர்க்குமாறு கோரி சபாநாயகரிடம் எழுத்துமூலக் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலருக்குக் கலந்தாலோசனைகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என வாதிட்ட சாணக்கியன், குழு முடிவொன்றை எட்டும் முன்னர் அவர்களது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த கரிசனைக்களுக்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, முன்மொழியப்பட்ட சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும், கலந்தாலோசனைகளை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.
கலந்தாலோசனையில் பங்கேற்றவர்கள் தாமாகவே பங்கேற்கக் கோரியதாகவும், மேலதிக விடயங்கள் இருப்பின் அவற்றைத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் முன்வைக்க முடியுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பில் பிரதி சபாநாயகரின் தீர்ப்பொன்றை நாடுவதற்குப் பதிலாகக் குழுவே முடிவெடுக்க வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.
இதில் தலையிட்ட பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இவ்விடயம் குழு மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டுமெனவும், பாராளுமன்றத்தில் இது குறித்து மேலதிகமாக விவாதிக்கத் தேவையில்லையெனவும் குறிப்பிட்டார்.
எனினும், 1979ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் (PTA) குறிப்பிட்ட சாணக்கியன் இராசமாணிக்கம், அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டத்தை முன்னெடுக்கும் முன்னர் பாராளுமன்றம் கவனமாக ஆராய வேண்டுமென எச்சரித்தார்.
சட்டம் இயற்றப்பட்ட பின்னர் அதனை மீளாய்வு செய்யும் பொறிமுறை பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில், சட்டம் இயற்றப்படுவதற்கு முந்தைய கட்டம் உரிய பரிசீலனையை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானது என அவர் வாதிட்டார்.
வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்த நிலையில், பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த விடயத்தைத் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என்ற நீதி அமைச்சரின் நிலைப்பாட்டை நிராகரித்துப் பேசிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்றத்தினாலேயே குழு நிறுவப்பட்டமையால் இது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் சபைக்கு இருப்பதாக வாதிட்டார்.
மேலும்,பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மீறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தொடர்ச்சியான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், சாணக்கியனின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இந்த விடயம் குழுவில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினார்.
































