Nov 24, 2026 - 04:12 PM

நெல்லையிலிருந்து மதுரை திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்ட தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இன்று (24) மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனப் பல்வேறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பான வழக்கில், கடும் நிபந்தனைகளுடன் இந்த ஆண்டில் மட்டும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், குருநானக் ஜெயந்தி விடுமுறை காரணமாக இன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாகச் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, திருப்பரங்குன்றம் செல்லத் திட்டமிட்டிருந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையிலுள்ள அவரது இல்லத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், தடையை மீறி ஆதரவாளர்களுடன் அவர் திருப்பரங்குன்றம் நோக்கிப் புறப்பட்டபோது, நெல்லை தச்சநல்லூர் சோதனைச் சாவடியில் வைத்து மாநகர பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

































