Oct 9, 2026 - 11:09 AM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் குடாகம பாலத்திற்கு அருகே உள்ள வளைவு பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு மோட்டார் சைக்கிள் விபத்துகளில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சாரதி சிறிய காயங்களுடன் வீடு திரும்பியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தார்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று (08) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொட்டகையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் குறித்த வளைவு பகுதியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒரு விபத்து இடம்பெற்ற சில நிமிடங்களிலேயே மற்றொரு விபத்தும் ஏற்பட்டுள்ளதுடன் இந்த இரண்டு விபத்துகளும் அப்பகுதியில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாக தெரிவிக்கும் பிரதேசவாசிகள் சாரதிகளை எச்சரிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு வீதிச் சமிக்ஞைகள் பொருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் இந்தப் பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதால் சாரதிகள் வேகத்தைக் கட்டுப்படுத்தும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


































