Nov 24, 2026 - 07:37 PM

நடுக்கடலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்த சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
சைப்ரஸ் நாட்டுக் கொடியுடன் பயணித்த 'எம்.வி. ஏ.ஏ.எல் ஜிப்ரால்டர்' (MV AAL Gibraltar) என்ற சரக்குக் கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்தமையால், கப்பல் செயலிழந்துள்ளது.
இதனையடுத்து, கப்பலைப் பாதுகாப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுமார் 160 மீற்றர் நீளமுடைய இந்தக் கப்பல், இயந்திரக் கோளாறுக்கு உள்ளானபோது சுமார் 23,000 டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடுக்கடலில் செயலிழந்த இந்தக் கப்பல், 4 இழுவைப் படகுகளின் (Tug boats) உதவியுடன் துறைமுக வளாகத்திற்குள் இழுத்து வரப்பட்டுள்ளது.
கப்பலைத் துறைமுகத்திற்குள் அனுமதிப்பதற்கான உரிய அனுமதிகள் கிடைக்கும் வரை கடலில் தரித்து நின்ற காலப்பகுதியில், துறைமுக நிர்வாகத்தினால் மூன்று தடவைகள் கப்பலுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தெரிவித்துள்ளது.
தற்போது துறைமுக வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கப்பல், திருத்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கப்பலின் திருத்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு இலங்கையிலுள்ள அதன் உள்ளூர் முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கப்பல் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

































