Oct 10, 2026 - 01:20 PM

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரியாத் விமான நிலையத்தைச் சுற்றி அண்மையில் நிலவிய பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு மறுஆய்வுகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணிக்குழாமினரின் பாதுகாப்பே தங்களது முதன்மை முன்னுரிமை என்பதால், நிலவும் சூழ்நிலை வர்த்தக விமானச் செயல்பாடுகளுக்குப் பொருத்தமான மட்டத்தில் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையிலிருந்து தொடர்புகொள்வதாயின் 1979 என்ற இலக்கத்திற்கும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற இலக்கத்திற்கும், WhatsApp செய்திகளுக்கு மட்டும் +94 74 444 1979 என்ற இலக்கத்திற்கும் தொடர்புகொள்ள முடியும்.
இதுதவிர, உங்களது பயண முகவர் (Travel Agent) மூலமாகவோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்றோ தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


































