Oct 10, 2026 - 05:30 PM

இந்தியக் கல்வி முறையில் நிலவும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட பரீட்சை வினாத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மாணவர்களை ஒருங்கிணைத்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 'மாணவர்களின் குரல்' (Voice of Students) என்ற தேசிய அளவிலான முன்னெடுப்பை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, மகாராஷ்டிராவின் புனே மற்றும் நாசிக், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இன்று சென்னைக் தீவுத் திடலில் நடைபெறவுள்ள 'மாணவர்களின் குரல்' சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று மதியம் 12:30 க்குச் சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்திக்குக் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள தமிழக முதலமைச்சர் விஜய்யின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் காந்திக்கு, முதல்வர் விஜய் மதிய உணவு விருந்து அளித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் எவரும் இன்றி இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய தேசிய மற்றும் மாநில அரசியல் சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனைக்குப் பின்னர் இருவரும் நீலாங்கரையிலுள்ள இல்லத்திலிருந்து ஒரே காரில் புறப்பட்டனர். தொடர்ந்து, பாலவாக்கத்தில் அமைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனிக்குச் சொந்தமான உணவகத்திற்குச் சென்று அங்கு இருவரும் தேநீர் அருந்தினர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சரும் ஒரே காரில் பயணம் செய்து சந்தித்துக்கொண்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களின் சந்திப்பையொட்டி சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


































