Oct 11, 2026 - 07:54 AM

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் நேற்று (10) சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையை உருவாக்குவதற்கான ஆவணத்தில் அதன் உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி கையெழுத்திட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து சபையின் முதலாவது உத்தியோகபூர்வக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் பதவிவழி உறுப்பினர்களான வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராசா மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டனர்.
மற்றொரு பதவிவழி உறுப்பினரான புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இணையவழியூடாகக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதேவேளை, துறைசார் உறுப்பினர்களாகக் கலை மற்றும் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த சாந்தினி சிவநேசன், சட்டத்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை பிரபாகரன், வர்த்தகத் துறையைச் சேர்ந்த இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த கோசலை மதன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் நிர்வகிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் ஆவணங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், இந்தக் கூட்டத்தின் போது திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் கட்டடக்கலை மற்றும் அதன் சிறப்பம்சங்கள் தொடர்பான விளக்கங்கள் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுடன், உறுப்பினர்கள் பண்பாட்டு மையத்தின் பல்வேறு பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


































