Oct 11, 2026 - 08:39 AM

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மையம் ஒன்றில் பணியாற்றி வந்த ஆய்வக ஊழியர் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
அத்துடன், அந்தப் பகுதியில் பிளேக் தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஆய்வக ஊழியரின் உடல்நிலை குறித்து ரஷ்ய மாநில சீரமைப்பு ஆணைக்குழு நடத்திய பரிசோதனைகளில், அதிக ஆபத்துடைய நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் அனைவருக்கும் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன.
மேலும், அவர்களிடையே எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்பதால், தொடர்ந்து தொற்று பரவுவதற்கான எந்தச் சான்றுகளும் கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும், உயிரிழந்த ஊழியருக்கு என்ன நோய் தாக்கியது என்ற இறுதி முடிவு இன்னும் தெளிவாகக் கண்டறியப்படாதமையே தற்போதைய முக்கிய சந்தேகமாக உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2 ஆம் திகதியன்று குறித்த ஆய்வக ஊழியர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, காரணமின்றி ஏற்படும் தீவிர நியூமோனியா மரணங்கள் குறித்து உலகளாவிய சுகாதார அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்த ஊழியர் முறையான தடுப்பூசிகளைப் பெற்றிருந்தார் என்றும், அவரது உடலில் அவர் பணியாற்றிய இடத்துடன் தொடர்புடைய நுண்ணுயிர்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து தொடர்பாளர்களுக்கும் உடல்நலப் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, தேவையான அனைத்துத் தகவல்களும் உலக சுகாதார அமைப்புக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.


































