Oct 13, 2026 - 11:47 AM

சிறை தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர் மற்றும் பௌத்த தேரர்களின் மத உரிமைகளுக்காக மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பேரணி இன்று (13) நான்காவது நாளாக வரக்காபொல நகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் இப்பேரணியானது நிட்டம்புவ நகரம் வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘காவிக்கு நீதி சுதந்திரத்தின் பாதயாத்திரை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணி கடந்த 10 ஆம் திகதி கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
அன்று பேரணி கடுகண்ணாவை வரை சென்றதுடன் முதல் நாளை நிறைவு செய்திருந்தது.
இரண்டாம் நாளான (11) கடுகண்ணாவையில் இருந்து ஆரம்பமான பேரணி கேகாலை வரை சென்றது.
நேற்று (12) கேகாலை நகரத்தில் இருந்து ஆரம்பமான பேரணி வரக்காபொல நகரை வந்து அடைந்தது.
இந்தச் சுதந்திரத்தின் பாதயாத்திரை நிட்டம்புவ மற்றும் கடவத்தை ஆகிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் கொழும்பைச் வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






























