Oct 13, 2026 - 01:41 PM

கொமர்ஷல் வங்கியானது, உயர் நிகர மதிப்புடைய (HNW) வாடிக்கையாளர்களுக்குப்
பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான வங்கிச் சேவை அனுபவத்தை வழங்குவதற்கான
தனது உறுதிப்பாட்டை, பிரெஸ்டிஜ் (Prestige) சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியின் முழுமையான
பலத்தையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியானது,
பிராந்தியம் முழுவதிலும் உள்ள தனிப்பயனாக்கப்பட்ட நிதிச் சேவைகளில் ஒரு புதிய
மைல்கல்லாக அமைவதாக வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கான தங்களது பாரம்பரியத்தை உருவாக்கும் முயற்சியில்
அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், கொமர்ஷல் வங்கி பிரெஸ்டிஜ் சிறந்த சேவைக்
கட்டமைப்பை வழங்குகிறது. இது தனிப்பயனாக்கப்பட்ட வங்கிச் சேவை மற்றும் நிதிச்
சேவைகள், மூலோபாய சொத்து மற்றும் முதலீட்டு முகாமைத்துவம், நிபுணத்துவ
ஆலோசனைச் சேவைகள், உயர்தர வாழ்க்கைமுறைச் சலுகைகள் மற்றும் மதிப்புமிக்க
வெகுமதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, வாடிக்கையாளர்களை பிரத்தியேக வங்கிச்
சேவையின் ஒரு புதிய தளத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரெஸ்டிஜ் என்பது, கொமர்ஷல் வங்கியின் தற்போதைய எலைட் (Elite) எனும் பிரத்தியேக
வங்கிச் சேவை வர்த்தக நாமத்தை, HNW வாடிக்கையாளர்களின் நுட்பமான நிதி, சொத்து
மற்றும் வாழ்க்கைமுறைத் தேவைகளை மையமாகக் கொண்டு பிரத்தியேகமாக
வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட மூன்று அடுக்குகள் கொண்ட ஒரு திட்டமாக
மாற்றியமைத்துள்ள மூலோபாய உருமாற்றத்தைக் குறிக்கிறது.
கொழும்பு 07, ஆர். ஜி. சேனாநாயக்க மாவத்தையில் புதுப்பிக்கப்பட்ட புதிய தோற்றத்துடன்
அமைந்துள்ள வங்கியின் முதன்மை பிரெஸ்டிஜ் வங்கி இல்லத்தை மையமாகக் கொண்டு,
நாடு தழுவிய ரீதியில் தடையற்ற அணுகலை உறுதி செய்யும் வகையில், இலங்கையின்
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதான நகரங்களுக்கும் பிரெஸ்டிஜ் வங்கி அனுபவம்
விரிவுபடுத்தப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.
பிரெஸ்டிஜ் ஆனது வாடிக்கையாளர்களுக்கெனப் பிரத்யேகமாக Diamond, Sapphire மற்றும் Ruby
நிலைகளில் சேவைகளை வழங்குகின்றது. ஒரு பிரீமியம் சேவையிடம் எதிர்பார்க்கப்படும்
பிரத்தியேகத்தன்மையைப் பேணும் அதேவேளையில், ஒவ்வொரு வாடிக்கையாளரின் வங்கி
உறவுகளை மேம்படுத்தும் சலுகைகளையும் சேவைகளையும் மிகத் துல்லியமாக வழங்க
இம்மூன்று நிலைகளும் வழிவகுக்கிறது என வங்கி தெரிவித்துள்ளது.
வழக்கமாக பிரீமியம் வங்கிச் சேவையுடன் தொடர்புடைய வாழ்க்கைமுறைச் சலுகைகள்
மற்றும் வெகுமதிகளுக்கு அப்பால் விரிவடையும் ஒரு ஒருங்கிணைந்த அனுபவத்தை
உருவாக்கி, ஐந்து மூலோபாயத் தூண்களின் மீது பிரெஸ்டிஜ் சேவை கட்டமைக்கப்பட்டுள்ளது.
அன்றாட வங்கிச் சேவை மற்றும் முதலீட்டு முடிவுகளை மட்டுமல்லாது, சொத்துப் பாதுகாப்பு,
பாரம்பரியத் திட்டமிடல், குடும்ப நலன்கள், வணிகத் தேவைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட
வாழ்க்கைமுறைத் தேவைகளையும் உள்ளடக்கி, பிரெஸ்டிஜ் வாடிக்கையாளர்களுக்குத்
தங்களது வங்கியுடன் ஒரு முழுமையான பிணைப்பை வழங்கும் வகையில் இந்த ஐந்து
தூண்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன என வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான
சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின்
மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World
Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக்
கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு
மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில்
முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய
வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும்
திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல்
வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள்
மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும்,
பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு
முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில்
பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய்
சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய்
சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ்
மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd
மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை
வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

































