Oct 16, 2026 - 07:55 AM

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் என யேமன் சுகாதார அமைச்சர் காசிம் புஹைபே (Qasim Buhaibeh) உறுதிப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்களும் சிவில் ஊழியர்களுமே உயிரிழந்ததுடன் காயங்களுக்கு உள்ளானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அல்-மாஷிக் (Al-Maashiq) ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் கட்டளை மையங்களே இந்தத் தாக்குதலுக்கு முக்கிய இலக்காக இருந்தன.
யேமன் அரச படைகளும், அவர்களுக்கு ஆதரவளித்து வரும் சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியும் இந்த வளாகத்தையே தங்களது தளமாகப் பயன்படுத்தி வருகின்றன.
ஹூதி அமைப்பினர் யேமன் அரசப் படைகளின் கட்டளை மையத்தின் மீது மூன்று ஏவுகணைகளையும், சவூதி கூட்டணிப் படைகளின் மையத்தின் மீது இரண்டு ஏவுகணைகளையும் வீசித் தாக்கியுள்ளனர்.
மறுபுறம், சவூதி அதிகாரிகளின் தலைமையில் இயங்கியதாகக் கூறப்படும் அந்தத் தளத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமையகமும் ஆயுதக் களஞ்சியங்களுமே குறிவைக்கப்பட்டதாக ஹூதி சார்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் யேமன் பிரதமர் ஷயா அல்-சந்தினி (Shaya al-Zindani) மாளிகையிலேயே இருந்தார். எனினும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதலை பிரதமர் அல்-சந்தினி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அதேநேரம், ஹூதி கிளர்ச்சியாளர்களைக் கலகக்காரர்களாகக் குற்றம்சாட்டியுள்ள யேமன் அமைச்சரவை, இந்தத் தாக்குதல்கள் தங்களது படைகளின் மன உறுதியைக் குலைக்காது என்றும், யேமனின் நடைமுறைத் தலைநகரமாக ஏடன் தொடர்ந்து விளங்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமனின் தலைநகரான சானாவை (Sanaa) கைப்பற்றி நாட்டின் பெரும்பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசுக்கு ஆதரவாகச் சவூதி அரேபியா தலைமையில் 2015 ஆம் ஆண்டு இராணுவக் கூட்டணி களமிறங்கியது.
பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் போரில், 2022ஆம் ஆண்டில் எட்டப்பட்ட போர்நிறுத்தம் சமீபத்தில் முறிவடைந்தது. இதனால் தற்போது மோதல்கள் மீண்டும் உக்கிரமடைந்துள்ளன.
மேலும், சவூதி அரேபியா மீது ஹூதி அமைப்பினர் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களும் சமீப காலமாகத் தீவிரமடைந்துள்ளன. இந்த மாதத்தில் மட்டும் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை ஹூதி அமைப்பினர் 20 முறை குறிவைத்துள்ளதாக சவூதி கூட்டணி செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
































