Oct 16, 2026 - 02:08 PM
By முல்லைத்தீவு நிருபர் தவசீலன்
By முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (16) மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னதாக சாதனை மாணவர்கள் மல்லாவி அனிஞ்சியங்குளம் பாடசாலை முன்றலில் இருந்து மங்கள வாத்திய இசையுடன் பாடசாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் மல்லாவி நகரில் குறித்த சாதனை மாணவர்களுக்கு வர்த்தகர்கள் மக்கள் அமோக வரவேற்ப்பளித்து பரிசுப் பொருட்களையும் வழங்கி கெளரவித்தனர்.
தொடர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியை அண்மித்த சாதனை மாணவர்கள் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலை மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் தம்பி ஐயா தர்மராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சாதனை மாணவர்கள் மற்றும் இவர்களை பயிற்றுவித்தவர்கள் பாடசாலை சமூகத்தினரால் கெளரவிக்கப்பட்டனர்.
கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தனர்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை ஐந்து நாட்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிகள் 09.10.2026 அன்று நடைபெற்றன.
இப்போட்டியில் பங்குபற்றிய மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் ஒருவர் வெள்ளிப் பதக்கத்தையும், இருவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்று பாடசாலைக்கும், பிரதேசத்துக்கும், துணுக்காய் கல்வி வலயத்துக்கும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்திருந்தனர்.
அந்தவகையில் எஸ். டானுஜா (S. Danuja) – 57–60 கிலோகிராம் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் எம். அபிஷா (M. Abisha) – 60–65 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் யு.கலைவாணி (U. Kalaivaani) – 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 48–50 கிலோகிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றிருந்தனர்.
இம்மாணவர்களுக்கான குத்துச்சண்டைப் பயிற்சிகளை, முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரரும் பல தேசிய வீரர்களை உருவாக்கியவருமான கா. நாகேந்திரன் (வள்ளுவன் மாஸ்டர்) மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனையும் குத்துச்சண்டைப் பயிற்றுநருமான இந்துகாதேவி ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

































