Oct 16, 2026 - 06:01 PM

பாராளுமன்றம் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (16) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதற்கு அமைய பாராளுமன்றம் கூடும் சகல தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.30மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணிக்கு 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் இரண்டு (திருத்தச்) சட்டமூலம் (சட்டமூல இலக்கம் 70 மற்றும் 80) தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் பின்னர் 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.
அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் மு.ப 5.00மணி வரை விசர்நாய்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
































