Oct 18, 2026 - 06:41 AM
By கிளிநொச்சி நிருபர் சப்தன்
By கிளிநொச்சி நிருபர் சப்தன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுற்றாடல் அமைச்சர், கடந்த ஆண்டு அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, குறிப்பாக வடக்கு மாகாண மாவட்டங்களில் முன்னர் வன வள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 2010 ஆம் ஆண்டு முதல் வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களுக்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் GPS ஆள்கூறுகளின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்பட்டன எனக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சில அரச அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் பொதுமக்களின் தனியார் இடங்கள் கூட தவறாக, பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு தவறாக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை முதற்கட்டமாக விடுவிப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்தக் காணிகள் எந்த அளவிற்கு விடுவிக்கப்படலாம் என்பது குறித்தான தற்காலிகக் கருத்துகளும், பிரதேசத்தின் ஏனைய விசேட பிரச்சினைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும், எதிர்காலத்தில் திணைக்களங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து சிறப்பாகச் செயல்படுவது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
உடனடித் தீர்வு காண முடியாத சிக்கல்களுக்கு, விரைவான மற்றும் முறையான வழிமுறைகள் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
































