Oct 17, 2026 - 08:01 PM

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியாகும் போது, மூன்று மாத காலப்பகுதிக்குள் அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் வேலைத்திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை - பெலவத்தையில் அமைந்துள்ள அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு மேற்கொண்ட அவசரக் கள விஜயத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது போதைப்பொருள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை வெளியிடும் செயல்முறைகள் மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆய்வக அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கணினிமயமாக்கல் செயல்முறைகள் மற்றும் அதற்கான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நீதிமன்றச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதிலும், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் குறித்த இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை உரிய காலத்தில் வழங்குவது மிக முக்கியமான காரணியாகும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதற்காக அனைத்து அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியமானது என வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் நிலவிய வெற்றிடங்கள் மற்றும் வசதிக் குறைபாடுகள் காரணமாக அறிக்கைகளை வழங்குவதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்து வெற்றிடங்களை நிரப்பவும், இரவு நேர மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தேங்கிக் கிடந்த அறிக்கைகளை விரைவாக வெளியிடும் விசேட திட்டத்தின் கீழ், 5 கிராமுக்கும் குறைவான போதைப்பொருள் மாதிரி தொடர்பான 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலான அனைத்து பகுப்பாய்வு அறிக்கைகளும் வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டதுடன், ஏனைய அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
































