Oct 17, 2026 - 06:39 PM

பிரபல நடிகர் தனுஷ் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணையப் போகிறாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள நிலையில், அவர் கட்சியில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற அதிமுகவின் 55 ஆவது ஆண்டு தொடக்க விழா ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவிவரும் சூழ்நிலையில், தனுஷ் அதிமுகவில் இணைவாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ராஜேந்திர பாலாஜி, "அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குச் சேவையாற்ற யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து இணைத்துக் கொள்ளும் பரந்த பக்குவம் கொண்டவர்.
இயக்கத்தின் வளர்ச்சிக்குத் பங்களிப்பவர்களாக இருப்பாரேயானால், அவர்களைத் தடுத்து நிறுத்தாமல் இணைத்துக் கொள்வார்.
இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்னணி நடிகரான தனுஷ் அதிமுகவில் இணைந்தால், அவரை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம்" என்றார்.
இதற்கிடையில், நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றிக் குறிப்பிட்ட அவர், நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்றாலும், அரசியலுக்கு வந்த பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது சரியாக இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.
நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைவது குறித்த தகவல்கள் உண்மையா அல்லது வதந்தியா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
































