Oct 19, 2026 - 12:41 PM

Flora Tissues மற்றும் ஸ்ரீ லங்கா சுமித்ரயோ ஆகியன இணைந்து உலக மனநல தினத்தை
முன்னிட்டு கொழும்பு சிட்டி சென்ரரில், “பேசப்படாத வார்த்தைகளின் சுவர்” எனும்
விழிப்புணர்வூட்டும் சுவரை அறிமுகம் செய்துள்ளன. உலக மனநல சுகாதார அமைப்பின்
வழிநடத்தலிலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவிலும் அனுசரிக்கப்பட்ட உலக மனநல
தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்ட விசேட பகுதிக்கு வருகை
தந்த பொதுமக்களிடம், தங்களால் மற்றவர்களிடம் வெளிப்படுத்த முடியாமல் போன மன
உணர்வுகளை ஒரு தாள் கைக்குட்டையில் எழுதி, அதனைப் பொதுச்சுவரில் ஒட்டுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இந்த ஆண்டின் உலக மனநல தினத்தின் கருப்பொருளான கேட்கப்பட்ட வாழ்க்கை
அனுபவங்கள்: நிஜக் குரல்கள், நிஜ மாற்றம் (Lived Experiences Heard: Real Voices, Real
Change) என்பதை மையமாகக் கொண்டு இவ்விழிப்புணர்வுச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் ஒட்டப்பட்ட ஒவ்வொரு குறிப்பும், வழக்கமாக மௌனிக்கப்படும் மனிதக் குரல்களின்
பிரதிபலிப்பாக விளங்கியது. தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பிய
பார்வையாளர்கள், #WallOfUnspokenWords என்ற ஹாஷ்டாக் மூலம் சமூக வலைத்தளங்களில்
பதிவிடுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். அத்துடன், வருகை தந்த நபர்களுக்கு மனநல
விழிப்புணர்வின் அடையாளச் சின்னமான பச்சை நிற றிப்பன் பின்கள் வழங்கப்பட்டன.
ஒரு குழந்தையின் கண்ணீரைத் துடைப்பது முதல் ஒரு குடும்பத்தின் துயரத்தைப் பகிர்ந்து
கொள்வது வரை, மனித வாழ்வின் மிகவும் தனிப்பட்ட மற்றும் கடினமான தருணங்களில்
டிஷூத் தாள்கள் (Tissues) பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வருகின்றன. Flora Tissues
நிறுவனம் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இத்தகைய முக்கிய தருணங்களில் மக்கள் நாடும்
ஒரு நம்பகமான வர்த்தக நாமமாக திகழ்கின்றது. இத்தகைய நெருங்கிய தொடர்பு, மனநல
விழிப்புணர்வு குறித்துப் பேசுவதற்கு Flora Tissues முன்வந்தமை பிரதான காரணமாகும்.
எப்போதும் நம் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் ஒரு தயாரிப்பு, மனிதர்களுக்கு ஆறுதல்
தேவை என்பதையும், அந்த ஆறுதலானது மனதிலிருப்பதை உரக்கக் கூறுவதிலிருந்து
ஆரம்பிக்கின்றது என்பதையும் நினைவூட்டும் ஒரு கருவியாக அமைய முடியும்.
Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட் மூலோபாயம் மற்றும் கூட்டாண்மை
விருத்தி தலைமை அதிகாரி சேஷயா சுர்தானி கருத்துத் தெரிவிக்கையில், “தலைமுறை
தலைமுறையாக இலங்கைக் குடும்பங்கள் Flora Tissues மீது அளப்பரிய நம்பிக்கை
வைத்துள்ளன. ஒரு தயாரிப்புக்கு அப்பாற்பட்ட பொறுப்புணர்வை அந்த நம்பிக்கை எமக்கு
வழங்குகின்றது. பலரும் தங்களின் மனப்போராட்டங்களை யாரிடமும் கூற முடியாமல்
மௌனமாக எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்குத் தங்களின் மன உணர்வுகளை
வெளிப்படுத்துவதற்கான ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நாம் விரும்பினோம். இன்று
ஏராளமான மக்கள் அந்த முதல் அடியை எடுத்து வைக்கத் தயாராக இருப்பதை நாம்
கண்டோம்.” என்றார்.
நாட்டின் மிகக் குறைவாகப் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக மனநலம் இன்னமும்
காணப்படுகின்றது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6,627
பேரைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய
அளவிலான ஆய்வொன்றில், 2007 ஆம் ஆண்டின் தேசிய மனநல ஆய்வறிக்கையுடன்
ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த மன அழுத்த விகிதங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன.
இருப்பினும், சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் இதனால் அதிகளவில்
பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் மத்தியிலான நிலைமை மேலும் கவலையளிக்கும்
வகையில் உள்ளது. 2024 ஆம் ஆண்டின் பாடசாலை மாணவர் ஆரோக்கியம் குறித்த சர்வதேச
ஆய்வில், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர்
தனிமையை உணர்வதாகவும், சுமார் 18 சதவீதமானோர் தொடர்ச்சியான மன அழுத்தத்தை
அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்கள் உட்பட பலர் இத்தகைய
மனப்போராட்டங்களை வெளியே சொல்லாமல் மௌனமாக வைத்திருக்கின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் எட்டு முதல் 10 பேர் வரை தற்கொலை செய்து கொள்வதாக
சுமித்ரயோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
பொது வைத்தியசாலையில் ஒரே நாளில் நான்கு தற்கொலை முயற்சிகள் பதிவானதைக் கண்ட
மருத்துவர் ஒருவரின் உந்துதலின் பேரில், காலஞ்சென்ற ஜோன் டி மெல் அவர்களால் 1974
ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா சுமித்ரயோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அரசாங்கத்தின் ஒப்புதல்
பெற்ற தொண்டு நிறுவனமாகவும், Befrienders Worldwide அமைப்பின் இணைவு
நிறுவனமாகவும் விளங்கும் இது, மனவேதனை, விரக்தி அல்லது தற்கொலை எண்ணங்களை
எதிர்கொள்ளும் நபர்களுக்கு இரகசியமான உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வருகின்றது.
இதன் தன்னார்வலர்கள் எத்தகைய மருத்துவ ரீதியான ஆலோசனைகளையும்
வழங்குவதில்லை; மாறாக, தீவிரமாகக் செவிமடூத்தல், அனுதாபம் மற்றும் தீர்ப்பளிக்காத
தன்மை ஆகியவற்றுடன் கூடிய நட்புரீதியான ஆதரவை வழங்குகின்றனர். இச்சேவையானது
முற்றிலும் இலவசமானதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வருடத்தின் 365
நாட்களும் காலை 9 மணி முதல் கிடைக்கப்பெறுகிறது. உதவி நாடுபவர்கள் தினமும் காலை 9
மணி முதல் மாலை 4 மணி வரை 0707 308308 என்ற இலக்கம் ஊடாக சுமித்ரயோ அமைப்பைத்
தொடர்புகொள்ள முடியும்.
ஸ்ரீ லங்கா சுமித்ரயோ அமைப்பின் தலைமை அதிகாரி சுரஞ்ஜனி விக்ரமரட்ன கருத்துத்
தெரிவிக்கையில், “எங்கள் தன்னார்வலர்கள் தினமும் பேசப்படாத வார்த்தைகளைக் கேட்டு
வருகிறார்கள். பெரும்பாலும் அந்த வார்த்தைகள் வேறு எவரிடமும்
வெளிப்படுத்தப்படாதவையாகவே இருக்கின்றன. அத்தகைய வார்த்தைகள் பொதுவெளியில்
வெளிப்படுவதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்ததற்காக Flora Tissues நிறுவனத்திற்கு
நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று தங்களின் மன உணர்வுகளைக்
குறிப்பாக எழுதிய அனைவருக்கும் நாம் கூறும் விடயம் மிகவும் எளிமையானது: உங்களுடைய
குரல் செவிமடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் எவராலும் தவறாக மதிப்பிடப்படமாட்டீர்கள்.”
என்றார்.
ஏதேனும் ஒரு விடயம் உங்களை மனரீதியாகப் பாதித்துக் கொண்டிருந்தால், அதை நீங்கள்
தனியாகச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி
எண்கள் ஊடாகத் தினமும் உங்களுக்காகச் செவிமடுக்க சுமித்ரயோ அமைப்பின்
தன்னார்வலர்கள் தயாராக இருக்கின்றனர்.

































