Oct 19, 2026 - 01:03 PM

சமீபத்திய உலகளாவிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர் அனுபவத்தை
தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்குமான தனது உறுதிப்பாட்டிற்கு அமைய, நுண், சிறு மற்றும் நடுத்தர
வணிகங்களுக்காக (MSMEs) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, ஒலி வழியிலான விசேட டிஜிட்டல் கொடுப்பனவு
ஏற்புச் சாதனமான Soundbox ஐ அறிமுகப்படுத்துவதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.
Mastercard நிறுவனத்தின் வழிகாட்டலிலும் Payable (Pvt) Ltd. நிறுவனத்தின் கூட்டிணைப்பிலும்
நடைமுறைப்படுத்தப்படும் இந்த Soundbox தீர்வானது, பிரதானமாக பணப் பரிவர்த்தனைகளிலேயே தங்கியிருக்கும் நுண் மற்றும் சிறு வணிகர்களை, மலிவான, எளிமையான மற்றும் திறமையான கொடுப்பனவு ஏற்பு அமைப்பின் மூலம் முறையான டிஜிட்டல் கொடுப்பனவு சூழலமைப்பிற்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சந்தையில் கிடைக்கக்கூடிய அனைத்து பிரதான அட்டை வலையமைப்புகள் மற்றும் QR திட்டங்களின் மூலமான கொடுப்பனவுகளையும் ஏற்றுக்கொள்ளும் வசதியை இச்சாதனங்கள் வழங்குகின்றன. இது நாட்டின் கொடுப்பனவு முறைமையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகின்றது.
Soundbox சாதனமானது தொடுகையில்லா அட்டைக் கொடுப்பனவுகள் மற்றும் QR அடிப்படையிலான பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிப்பதுடன், வெற்றிகரமான ஒவ்வொரு கொடுப்பனவுகளுக்கும் நிகழ்நிலை குரல் வழி உறுதிப்படுத்தலையும் வழங்குகின்றது. நிறைவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனையையும் இச்சாதனம் ஒலி மூலம் அறிவிப்பதால், வணிகர்கள் தங்களது வழக்கமான பணிப்பாய்வுக்கு எந்தவித இடையூறும் இன்றி கொடுப்பனவுகளை உடனடி சரிபார்ப்புச் செய்து கொள்ள முடிகின்றது. QR அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் போது கணக்குகளுக்கு உடனடியாக பணம் வரவு வைக்கப்படுவதால், சிறு வணிகர்களின் திரவத்தன்மை மேலும் அதிகரிக்கின்றது.
இந்த அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க, குறைந்த செலவையும் உடனடித் தன்மையையும் ஒன்றுசேர்ப்பதன் மூலம், சிறு வணிகர்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலத் தடைகளை அகற்றும் திறனே இத்தீர்வை மிகவும் ஈர்ப்புடையதாக்குகிறது. ஒரே சாதனத்தின் ஊடாக உடனடி உள்ளீர்ப்பு, நிகழ்நிலைப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் வசதி மற்றும் பல வழிமுறையிலான ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், மென்மேலும் டிஜிட்டல் மயமாகிவரும் சந்தையில் வணிகங்கள் அதிகப் போட்டியுடன் பங்கேற்பதற்கான நடைமுறைச் சாத்தியமான கருவி ஒன்றை நாங்கள் வழங்கி வலுவூட்டுகிறோம். என்றார்.
Payable நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. யொஹான் விஜேசிறிவர்தன விளக்குகையில்: Payable நிறுவனத்தில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் எந்தவொரு வணிகரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் ஒரே இலக்கை நோக்கியே நாங்கள் பயணித்து வருகின்றோம். Soundbox அந்த தொலைநோக்குப் பார்வையை நிஜமாக்குகின்றது. கடந்த வாரம் வர்த்தகத்தை ஆரம்பித்த ஒரு சிறு வணிக உரிமையாளரும், நாட்டின் மிகப்பெரிய சில்லறை வர்த்தகரைப் போன்றே டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான அணுகலைப் பெற்றிருக்க வேண்டும்;, அதுவும் அவர்களின் தற்போதைய நிலைக்குப் பொருத்தமான நியாயமான விலைப் புள்ளியில் அமைந்திருக்க வேண்டும். கொமர்ஷல் வங்கி மற்றும் Mastercard உடனான இந்த கூட்டிணைப்பு அதனையே சாத்தியமாக்கியுள்ளது என்றார்.
Mastercard நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திருமதி மகீஷா அமரசூரிய கருத்துத் தெரிவிக்கையில்:
பாதுகாப்பான, எளிமையான மற்றும் உள்ளடக்கிய கொடுப்பனவு அனுபவங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் சிறு வணிகங்களை வலுப்படுத்துவதிலேயே Mastercard கவனம் செலுத்துகிறது. கொமர்ஷல் வங்கி மற்றும் Payable ஆகியவற்றுடன் இணைந்து Soundbox ஐ அறிமுகப்படுத்துவது இலங்கையின் டிஜிட்டல் கொடுப்பனவு ஏற்பை விரிவாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். சிக்கனமான செலவையும் நவீன கண்டுபிடிப்பையும் ஒன்றிணைக்கும் இந்த மைல்கல்லானது, நாட்டின் நுண் மற்றும் சிறு வணிகச் சூழலமைப்பை தன்னம்பிக்கையுடன் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளவும், நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தவும், பணப் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுக்கவும் உதவுகின்றது என்றார். கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது.
Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில்
பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.
































